வீடு கட்ட தொடங்கி விட்டால், பட்ஜெட் தொகையை விட எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு செலவு கணக்கு அதிகமாக தொடங்கிவிடும். எங்கிருந்து, எப்படி செலவு வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் கட்டுமானம் சார்பான செலவுகள் நம்மை சோர்வடைய செய்துவிடும். இப்படி பல லட்சங்கள் செலவழித்து கட்டிய நவீன வீடுகளும் நம்மை கட்டுமானத்திற்கு பின்னரும் செலவழிக்க தூண்டும்.
மின்சாரம், தண்ணீர் என செலவு நீண்டபடியே இருக்கும். இதனால் வீடு கட்டமைக்கும் போதே சிக்கன வழிமுறைகளையும் கடைப் பிடித்து வீடு கட்டவேண்டும். அப்படி கட்டமைத்திருந்தால் கட்டி முடித்த பின்னர் ஏற்படும் செலவுகளை குறைக்கலாம். வீடு கட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம்.
* வீட்டுக்குள் வெளிச்சம் பிரகாசமாக பரவி இருக்கும் அளவிற்கு கட்டுமான திட்டம் தீட்டப்பட வேண்டும். வாஸ்துவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிச்சத்துக்கும் கொடுக்க வேண்டும். அதற்கு கட்டுமான திட்டம் தயாரிக்கும்போதே சூரிய வெளிச்சம் அதிக நேரம் விழும் பகுதியை கண்டறிந்து, அதற்கு ஏற்ப திட்டங்களை வகுக்க வேண்டும். காலை, மாலை வேளையில் சூரிய ஒளி உள் நுழையும் வகையில் ஜன்னல்களை அமைக்க வேண்டும். அறையை பொறுத்து கூடுதல் ஜன்னல்களையும் அமைக்கலாம். ஜன்னல் அமைப்பதற்கு செலவு அதிகமாகும் என்று நினைத்து அதன் எண்ணிக்கையை குறைத்துவிடக் கூடாது. பின்னாளில் வெளிச்சத்துக்கு சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் பகல் வேளையிலும் வீட்டிற்குள் விளக்குகளை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம். அது மின்சார செலவை அதிகரித்துவிடும்.
* வெளிச்சத்தை போலவே காற்றோட்டத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஜன்னல்கள் அமையும் திசை வெளிச்சத்தை போல, காற்றையும் உள் வரவழைக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும். காற்றின் சுழற்சி எல்லா கால நிலையிலும் அறைக்குள் உள்நுழையும் விதமாக இருக்க வேண்டும்.
* மின் இணைப்புகளை அறையின் தேவைகளை கருத்தில் கொண்டு அமைக்க வேண்டும். திட்டமிடாமல் அமைக்கப்படும் மின் இணைப்புகள் செலவை அதிகரிக்கும். சில சமயம் தேவையில்லாமல் சுவிட்ச் போர்டுகள் அமைந்திருக்கும். அல்லது மீண்டும் மின் இணைப்பு கொடுக்க வேண்டிய வகையில் அமைந்துவிடும். அதை தவிர்க்க எந்த அறையில் எந்த வகையான எலக்ட்ரானிக் பொருளை வைக்கப்போகிறோம் என்பதை இறுதி செய்து அதற்கேற்ப வயரிங் வேலைகளை செய்ய வேண்டும். அதன் மூலம் தேவையில்லாத இணைப்புகள் அமைக்கப்படாததுடன் மின் செலவும் கட்டுப்படும்.
* மின் விளக்குகளும் அதிக மின்சாரத்தை உள்வாங்குவதாக இருக்கக்கூடாது. குறைந்த அளவு மின்சாரத்திலேயே பிரகாசமான வெளிச்சத்தை தரக்கூடியதாக அமைய வேண்டும். அத்தகைய விளக்குகளை வாங்குவதற்கு அதிக செலவாகும் என நினைத்து சாதாரண விளக்குகளை பயன்படுத்தினால் அது மின் கட்டணத்தில் செலவாக எதிரொலிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
* கட்டிட சுவரும் அதிக வெப்பத்தை உள்ளே கடத்தாத வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
* தண்ணீர் சிக்கனம் மிக முக்கியம். சமையல் அறையில் அமைக்கப்படும் குழாய்கள் குறைந்த அளவில் தண்ணீரை நுரையுடன் வெளியேற்றும் வகையில் அமைய வேண்டும். அதன் மூலம் பாத்திரங்கள் துலக்கும்போது அதிக தண்ணீர் வீணாவதை கட்டுப்படுத்த முடியும்.
* மழைக்காலங்களில் நீரை சேமிக்கும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் விதமாக செடிகள் வளர்த்து சிறிய அளவில் வீட்டு தோட்டத்தை உருவாக்க வேண்டும்.
* சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சோலார் பேனல்களை நிறுவுவதும் வீட்டின் மின் தேவையை போக்க உதவும். மின்சாரத்துக்கு ஆகும் செலவையும் சிக்கனப்படுத்தலாம்.
0 Comments