மலையக மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்ற திட்டமிட்ட பிரஜைகள் முன்னணிக்கு மலையக பெருந்தோட்ட மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள். நுவரெலியா மாவட்டத்தில் பிரஜைகள் முன்னணிக்கு 2250 வாக்குகளை மட்டும் அளித்து தமது தீர்ப்பை தெளிவாக வழங்கியுள்ளார்கள்.
தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போயிருந்த ரங்கா கடந்த 28 ஆம் திகதி சிரச தொலைகாட்சியில் இடம்பெற்ற தவச என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பின்வருமாறு பதில் கூறியுள்ளார். நான் தோல்வியடையவில்லை ஏனென்றால் நான் தேர்தலில் போட்டியிட வில்லையே போட்டியிட்டு நான் தோல்வியடைந்திருந்தால் தான் அது தோல்வி என அவர் குறிப்பிட்டிருந்தார். இங்கு ஒரு கேள்வி எழுகிறது.
அப்படியானால் 11 பெண்களை களமிறக்கி தேர்தலில் போட்டியிட்ட பிரஜைகள் முன்னணி உங்களுடையது இல்லையா? அதன் செயலாளர் நீங்கள் இல்லையா ? தோல்வியை தழுவிய பிறகும் நான் போட்டியிட வில்லையே எனக்கூறி அந்த 11 பெண்களையும் காட்டிக்கொடுத்து அவர்களே தோல்விக்குக்காரணம் என அர்த்தப்பட கூறும் இவரின் சுயரூபத்தை இப்போதாவது அந்த பெண்கள் உணர்ந்தால் சரி.
இதற்கு அந்த முன்னணியின் செயலாளர் ஜெய ஸ்ரீ ரங்கா என்ன பதில் சொல்லப் போகின்றார். தொலைக்காட்சியில் நன்றாக அரசியல் வாதிகளிடம் கேள்வி கேட்கின்றார்.எனவே இவர் அரசியலுக்கு வந்தால் நன்றாக செயற்படுவார் என்ற நம்பிக்கையில் 2010 வருடம் மலையக மக்கள் தமது வாக்குகளை வழங்கி தேர்தலில் வெற்றி பெறச் செய்தார்கள்.
ஆனால் அந்த குறித்த தொலைக்காட்சியில் குறித்த அந்த நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிடப்பட்டு கேள்வி பதில்கள் தயாரிக்கப்பட்டன என்பது அவர்களுக்கு தெரியாது. என்ன கேள்வி என்ன பதில் என்பதை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரங்காவால் தீர்மானிக்கப்பட்ட பின்பு அதனை பங்குபற்றுபவர்கள் ஒப்புவிக்கும் ஒரு நிகழ்ச்சியாகவே இது அமைந்தது என்பதை அனைவரும் அண்மையில் வெளியான சமூக வலைதளங்கள் மூலம் நன்கு அறிந்து கொண்டார்கள்.அதன் பின்பு அந்த நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டது.
இந்த தேர்தலில் மலையக மக்கள் சார்பாக 11 பெண்களை தனது கட்சியின் மூலம் களம் இறக்குவதாக கூறி அந்த பெண்களை கொழும்பிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு அழகு கலை நிலையங்களில் அழகுபடுத்தி தோதலில் போட்டியிட வைத்தார்.நான் அவரைப் பார்த்து கேட்க விரும்புகின்றேன் பாராளுமன்றத்திற்கு செல்லும் பெண்கள் எல்லோரும் அழகு கலை நிலையத்திற்கு ஏன் செல்ல வேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
அவர்களுக்கு அரசியல் அறிவை கொடுத்தால் அதனை வரவேற்கலாம்.சில வேளை இதனையும் திட்டமிட்டு நடத்தும் நிகழ்ச்சியை போல தேர்தலை நினைத்தாரோ தெரியவில்லை.ஊடகங்களின் நடுநிலைமைபற்றி அதாவது வீரகேசரியினதும் ,சூரியகாந்தி பத்திரிக்கைபற்றியும் கேள்வி எழுப்புகின்ற இவர் இவர் பணியாற்றும் ஊடகத்தின் தர்மம்பற்றி யார் கேள்வி எழுப்புவது ? கடந்த பல தசாப்தங்களாக இலங்கை வாழ் தமிழர்களுக்கு உயரிய சேவையை வீரகேசரி நிறுவனம் வழங்கியுள்ளதை மக்கள் அறிவார்கள்.உங்கள் நிறுவனத்தின் செய்திச் சேவை எப்படி இருக்கின்றது என்பதையும் மக்கள் அறிவார்கள்.
நீங்கள் ஒரு பாடசாலைக்கு பாதணிகளை வழங்கும் நிகழ்வை தலைப்பு செய்தியாக போட்டு செய்தி ஒளிபரப்பானதையும் இந்த மக்கள் அறிவார்கள்.ரங்கா என்பவர் அவருடைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேள்வி கேட்பது போல எமக்கும் இந்த சந்தர்ப்பத்தை வழங்குவாரா? அவருடைய தொலைக்காட்சியில் இல்லாவிட்டாலும் அரசாங்க தொலைக்காட்சியில் ஒரு விவாதத்திற்கு வருவாரா? காரணம் இதுவரையில் அவர் கேள்வி கேட்டு நடத்தும் திட்டமிட்ட நிகழ்ச்சியாக இல்லாமல் உண்மையாகவே ஒரு நேரடி நிகழ்ச்சியாக நடத்த ஒத்துழைப்பாரா? மலையக மக்கள் மீது அதிக அக்கறையுள்ளவராக காட்டிக் கொள்ளும் ரங்கா இந்த மக்களுக்கு செய்திருக்கின்ற சேவைகளை என்ன என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.
எத்தனை ஊடகவியலாளர்களை அவர் உருவாக்கியிருக்கின்றார் ?எமக்கு தெரிந்த வகையில் அவருடைய தொலைக்காட்சியில் பிராந்திய செய்தியாளர்களாக இருந்த பலரை வெளியேற்றிய பெருமை அவருக்கு உண்டு.அதில் அதிகமானவர்கள் மலையக செய்தியாளர்கள் என்பதை கூற வேண்டும்.அதில் நானும் ஒருவன்.
எங்களுக்கு ரங்காவைப்பற்றி சில விடயங்கள் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
யார் இந்த ரங்கா?
எங்கிருந்து வந்தார்?
இவருடைய பின்னணி என்ன?
மலையக மக்களுக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு என்ன?
மலையகத்தைப்பற்றி இவருக்கு என்ன தெரியும்?
இவர் மலையகத்தில் கடந்த 5 வருடத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து செய்த சேவைகள் என்ன?
இவர் ஊடகவியலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதால் எத்தனை ஊடகவியலாளர்களை மலையகத்தில் உருவாக்கியிருக்கின்றார்?
தொழிற்சங்க சந்தாவை ஏளனப்படுத்தும் இவரால் ஏன் தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்க முடியாதுள்ளது?
இவருடைய கட்சியின் தலைவர் யார்?
எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்?
ஏன் நடந்து முடிந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை?
உங்கள் பிறந்த ஊரில் என்ன செய்திருக்கின்றீர்கள்?
ஏன் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு மலையகத்தில் வந்து அரசியல் செய்கின்றீர்கள்?
நீங்கள் ஊடகவியலாளரா?அல்லது அரசியல் வாதியா?அல்லது வேறு யாருமா?
இந்த கேள்விகளுக்கு தாங்களுடைய ஊடகத்தில் நீங்கள் மட்டும் இருந்து கொண்டு பதில் கூறாமல் எங்களையும் அழைத்து பேசினால் அது உண்மையான ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன். அது பதிவு செய்யப்பட்டு ஒளிப்பதிவு செய்யும் நிகழ்ச்சியாக இல்லாமல் நேரடி நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். அவருக்கு இங்குள்ள பல தொழிற்சங்கங்களுக்கும் மக்கள் நல்ல பதில் தேர்தலில் வழங்கியிருக்கின்றார்கள்.
எனவே மலையக தலைவர்களும் சரியாக அடுத்த ஜந்து வருடத்தில் சரியான முறையில் செயற்படாவிட்டால் உங்களையும் மக்கள் நிராகரிக்க தயங்க மாட்டார்கள்.
-நுவரெலியா கண்ணன்-
நன்றி சூரியகாந்தி

0 Comments