அகதிகள் நெருக்கடி தொடங்கியதில் இருந்து ஒரு அனர்த்தத்தில் பெரிய எண்ணிக்கையிலான அகதிகள் கடலில் மூழ்கி பலியானமை இதுவே முதல் தடைமை என தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு போர் மற்றும் வறட்சி காரணமாக சிரியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வெளியேறும் மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் அடைய வருகின்றனர். அதற்காக திருட்டுத்தனமாக அனுமதியில்லாத படகுகளில் பயணம் செய்கின்றனர்.
அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் செல்ல நுழையும் வாயிலாக கிரீஸ் உள்ளது. அவ்வாறு வரும்போது தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாகவும், அளவுக்கு மீறி ஆட்களை ஏற்றி வருவதாலும் படகுகள் கடலில் மூழ்கி ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இச்சம்பவம் அடிக்கடி நடைபெறும் வாடிக்கையான சம்பவமாகி விட்டது. அது போன்ற சம்பவம் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமையும் நடந்துள்ளது. ஒரு அகதிகள் படகு துருக்கியை கடந்து கிரீஸ் நாட்டின் ஏஜியான் கடலில் வந்தபோது பார்மா கோன்சி தீவின் அருகே தண்ணீரில் மூழ்கியது.
அதிகாலை நேரத்தில் அங்கு கடற்கரைக்கு வந்தவர்கள் கரையில் பிணங்கள் ஒதுங்கி கிடப்பதை பார்த்து கிரீஸ் கடல் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 68 பேர் மீட்கப்பட்டனர். 30 பேர் கடலில் நீந்தி கரை சேர்த்தனர்.
ஆனால் 34 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். அவர்களில் 15 பேர் குழந்தைகள். அதில் 4 பேர் பச்சிளம் சிசுக்கள் ஆவர். கடலில் மூழ்கி இறந்தவர்கள் மரபடகில் புறப்பட்டு வந்துள்ளனர்.
பலத்த காற்று வீசியதால் நிலை தடுமாறிய படகு கடலில் மூழ்கி விபத்துக் குள்ளானது. இத்தகவலை கிரீஸ் கப்பல்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார்.
அகதிகளை வரவேற்க ஹங்கேரி உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் மறுத்து வரும் நிலையில் முதலாவதாக அவர்களை ஜெர்மனி வரவேற்றது. அதற்கான அறிவிப்பை பிரதமர் ஏஞ்சலா மெர்கல் வெளியிட்டார். எனவே ஹங்கேரியில் இருந்து ரெயில், பஸ்கள் மற்றும் படகுகள் மூலம் ஜெர்மனியின் முனீச் நகருக்கு அகதிகள் படையெடுத்து சென்றனர்.
தற்போது அங்கு 13,015 அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். இன்னும் 1400 அகதிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து தங்கள் நாட்டில் அளவுக்கு அதிகமான அகதிகள் தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அங்கு மேலும் அகதிகள் வருகைக்கு ஜெர்மனி திடீரென தடை விதித்துள்ளது.
0 Comments