சிரியாவில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட அகதிகளை தங்கள் நாட்டிற்குள் அனுமதித்துள்ளது. ஏராளமானோர், அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.
அகதிகள் விஷயத்தில் அமெரிக்கா அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கும் வகையில், அந்நாட்டு அரசு அடுத்த ஆண்டு 10 ஆயிரம் சிரிய அகதிகளை அனுமதிக்க வேண்டும் என அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், வளைகுடா நாடுகளும் சிரிய அகதிகளின் துயரத்தைப் போக்க இன்னும் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 25 லட்சம் சிரிய அகதிகளை தங்கள் நாட்டிற்குள் அனுமதித்துள்ளதாக எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடான சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
“சிரியாவில் இருந்து வந்தவர்களை சவுதி அரசு அகதிகளாக கருதவில்லை. அவர்களை முகாம்களில் தங்க வைக்கவில்லை. அவர்கள் நாடு முழுவதும் எங்குவேண்டுமானாலும் செல்வதற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் வசிப்பிட அந்தஸ்துக்கு பல்லாயிரக்கணக்கானோர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வேலை, பள்ளி மற்றும் இலவச மருத்துவம் வழங்கப்படுகிறது” என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாக அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், தற்போது சிரியாவைச் சேர்ந்த எத்தனை பேர் சவுதியில் இருக்கிறார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
0 Comments