Subscribe Us

header ads

அம்பாறையில் மயில் கட்சிக்கு ஒரு ஆசனமும் கிடைக்காது- அஹமட் புர்கான் JP


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  அம்பாறை மாவட்டத்திற்கான வருகையானது நிச்சயமாக அக்கட்சி மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ளும்  நோக்கமாக அல்லாமல்  அம்பாறை மாவட்டத்தில்  முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையை அசைத்து அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமூகத்தை அரசியல் அநாதைகளாக்கும் திட்டமே தவிர வேறில்லை என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஊடக பேச்சாளரும் கிழக்கு மாகாண சமூக மற்றும்  பொருளாதார அபிவிருத்தி குழுத் தலைவருமான அஹமட் புர்க்கான் JP தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் அம்பாறை மாவட்டத்திற்கான வருகையென்பது நிச்சயமாக தனது  கட்சியில்  போட்டியிட்டு அம்பாறை மாவட்டத்தில்  ஒன்றோ அல்லது இரண்டோ முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்வதற்கான நோக்கமல்ல, நிச்சயமாக  அதை அவரால் பெற்றுக்கொள்ளவும் முடியாது.

அப்படியாயின், அவரின் வருகைக்கான பிரதான காரணத்தை அவதானித்துப் பார்க்கும் போது  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு தன்னால்  சவால் விடுக்க முடியும் என்பதை காண்பிக்கும் நோக்கமாகவே இம்முறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் கட்சி   பல ஆரவாரங்களுடன் அம்பாறை மாவாட்டத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து போட்டியிட்டு வருகின்றது என்பதை  மிகத்தெளிவாக விளங்கிக்கொள்ள கூடியதாக உள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்     அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதால் நிச்சயமாக எந்த ஒரு ஆசனமும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை நன்றே தெரிந்திருந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  கோட்டையை அசைத்து தேசிய அரசியலில் தன்னை முன்நிலை படுத்துவதையே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் விரும்புகின்றார் அதுவே அவரின்  இலட்சியமுமாகும் என்பதை  நாம் அனைவரும்  மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.


அதுமட்டுமல்லாமல் இன்றைய முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சிகளின் தற்கால ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உற்றுநோக்கினால் அவர்கள்  தமது சமூகத்திற்கான பாராளுமன்ற  உரிப்பினர்களை பெற்றுக் கொடுப்பார்களா? என்ற சந்தேகத்தையும், கேள்வியையும் மிக ஆழமாக  வலுப்பெறச் செய்கின்றது.  ஏனெனில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தனிப்பட்ட வாக்கு வங்கியான சுமார் 75 தொடக்கம் 80 ஆயிரம் வரையிலான  வாக்குக்களை சிதைத்து  அவ் வாக்குகளுக்குள்   போட்டியிடுவதற்கு பல கட்சிகள் முயற்சிப்பதென்பது  அக்கட்சிகள் எமது  முஸ்லிம் சமூகத்திற்கு செய்கின்ற பாரிய துரோகம் என்பதை புரிந்து கொள்வதில் சிந்திக்க தெரிந்த ஒவ்வொரு முஸ்லிம் மகனுக்கும்  கஷ்டமான ஒரு காரியம் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அத்துடன்   இவ்விடத்தில்தான் அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமூகம் மிக நுணுக்கமாக  சிந்திப்பதற்கும் கடமைப்பட்டுள்ளது.
ஆகவேதான், முஸ்லிம் வாக்காளர் பெருமக்களாகிய  நாங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எடுக்க வேண்டிய முக்கிய தீர்மானமாக ஒப்பீட்டளவில் இவ்விரண்டு கட்சிகளில்  எந்த  கட்சி  முஸ்லிம் சமூகத்தில்  மிக அக்கறை கொண்டுள்ளது என்பதை கண்டறிவது மாத்திரமல்லாமல் அந்த கட்சியில் எம் சமூகத்தின் உரிமைகளுக்காக தைரியமாக குரல் கொடுக்க துணிந்தவர் யார்? என்பதையும்  தேர்ந்தெடுத்து  தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பால் பிரதேச வாதங்களை களைந்து  ஒட்டுமொத்த முஸ்லிம்களும்  ஒருகுடையின் கீழ் ஒற்றுமையாக  ஒருகட்சியை தெரிவு செய்து அதனை ஆதரித்து  வாக்களிப்பதன்  மூலமாகத்தான்   தமது பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் இரண்டாம் நிலை கருத்துக்கு இடமில்லை, எனவும்  பெற்றுக்கொண்ட எமது பாராளுமன்ற உறுப்பினர்களின்  மூலமாக கிடைக்கும் பலாபலன்களை நம் சமூகம் எதிர்காலத்தில் அனுபவிக்க முடியும் எனவும் நான் திடமாக நம்புகின்றேன்.

அவ்வாறு இல்லாமல் சில வங்குரோத்து அரசியல் வாதிகளின் சுயநலத்திற்காக பிளவுபட்டு இவ்விரண்டு கட்சிகளுக்கும் வாக்குகளை பிரித்து வழங்குவதற்கு முற்படுவோமானால்  எமது வாக்குகள் இத்தேர்தலில் சின்னா பின்னமாக சிதறடிக்கப்பட்டு நாம் தெரிவுசெய்கின்ற உறுப்பினர்களுக்கான விருப்பு வாக்குகளில் விரிசல் ஏற்படும் சந்தர்ப்பம் ஏற்பட்டால்  அது பெரும்பான்மை இன வேட்பாளர்களின் வெற்றிக்கு மேலும்  வித்திடுவதாக அமைவதோடு,   எமது சமூகத்திற்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் முற்றுமுழுதாக இழக்கப்படும் வாய்ப்புக்களும்  உள்ளது.  அதேவேளை பெரும்பான்மை இனச் சமூகத்திற்கு வழமைக்கு மாறாக கூடுதலான பாராளுமன்ற  பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்வதற்கான சாதகத்தன்மையையும் உண்டாக்கும். இதுவே சமகால அரசியல் நகர்வுகளில் இருந்து அவதானிக்கக் கூடிய உண்மையும், யதார்த்தமுமாகும்.


எனவேதான், மேற்சொன்ன விடயத்தை கருத்தில் கொண்டு  எமது எதிர்காலத்தையும், இருப்பையும்  சிந்தித்து தார்மீகப் பொறுப்புடன் செயற்படுவது என்பது  சம்பந்தப்பட்ட கட்களின் கடமையும், அதற்கு வாக்களிக்கப் போகும் வாக்காளர்களின் கடமையும் ஆகும் என்பதே எனது வினையமான வேண்டுகோளாகும். என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments