உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக தற்போது விளையாடி வருகிறார். இவர் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கு தனது கையெழுத்திட்ட ரியல் மாட்ரிட் ஜெர்சியை அனுப்பி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பெரும்பாலான கிராமங்கள் அழிந்தன. அங்கு ஜெடின் என்ற 13 வயது சிறுவன் வசித்து வந்தான். அவன் கால்பந்து மீது தீரான ஆசைக் கொண்டவன்.
நிலநடுக்கத்தால் ஊரே அழிந்து தெரு ஓரங்களில் மக்கள் வாழ்ந்து வந்தபோதும், இவன் அழிந்து போன தெருவிற்கிடையே கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தான். இதைப்பார்த்த போட்டோகிராபர் ஒமர் ஹவானா, பத்திரிகையாளர் மகாரிடா மோடா ஆகியோர் இந்த சிறுவன் நிலை குறித்து ரொனால்டோவின் ஏஜென்ட் ஜார்ஜ் மெண்டெசிடம் கூறியுள்ளனர்.
இதன்மூலம் சிறுவன் பற்றி அறிந்த ரொனால்டோ, ஜெட்டினுக்கு தனது கைப்பட எழுதிய ஜெர்சியை அனுப்பி வைத்துள்ளார். அதில் ‘‘ஜெட்டின், நீ வலிமையாக இருக்க எனது வாழ்த்துக்கள்’’ என்று கூறி தன் கையெழுத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ஜெட்டின் கூறுகையில் ‘‘நான் ஜெர்சியை பெற்றவுடன் ஆச்சரியத்தில் உறைந்து போனேன். ஒரு நாள் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாட விரும்புகிறேன். ஏனென்றால், நான் கால்பந்தை விரும்புகிறேன்’’ என்றான்.
கால்பந்தில் நட்சத்திர வீரரான திகழ்ந்து வரும் ரொனால்டோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments