சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த அல்கொய்தா போராளிகள் இயக்க தலைவர் பின்லேடன் கடந்த 2011–ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது இளைய மகன் ஹம்சா பின்லேடன் சமீபத்தில் டுவிட்டரில் ஆடியோ மூலம் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் அல்கொய்தா போராளிகள் தாக்க வேண்டும்.
குறிப்பாக லண்டன், வாஷிங்டன், பாரீஸ் மற்றும் டெல் அவில் நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டும் என தெரிவித்து இருக்கிறார்.
பின்லேடனின் மிக இளைய மகனான ஹம்சாவுக்கு 23 அல்லது 24 வயது இருக்கலாம். எதிர்காலத்தில் இவரே அல் கொய்தா போராளிகள் இயக்க தலைவராகும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு தற்போது அவரது வலது கரமாக விளங்கிய அய்தான் அல்–ஷவாகிரி தலைவராக உள்ளார். அவருக்கு பிறகு இவர் தலைவராகலாம் என நம்பப்படுகிறது.
ஏனெனில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட அபோதாபாத் வீட்டில் இருந்து அவரது கடிதங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் தனக்கு பிறகு ஹம்சாவை அல்கொய்தா தலைவராக்க பின்லேடன் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
அபோதாபாத்தில் பின் லேடனுடன் அவரது மகன் ஹம்சா கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. அதன் பின்னர்தான் அவர் ஹம்சா அல்ல, காலித் என கண்டு பிடிக்கப்பட்டது.
தாக்குதலின் போது ஹம்சா குறித்த தகவல் தெரியாமல் இருந்தது. ஆனால் அவர் தப்பிச் சென்று இருக்கலாம் என அமெரிக்கா கருதியது. தற்போது அது உண்மையாகி விட்டது. ஆனால் அவர் எங்கு தலைமறைவாக இருக்கிறார் என தெரியவில்லை.
0 Comments