Subscribe Us

‘அப சரணய்’ சொல்லி கலவரத்தை தூண்டிய காவியுடை தரித்த கடும் போக்காளர்கள்


காவியுடை தரித்த கடும் போக்காளர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் இன்று மாலை முறையே தர்ஹா நகர், அம்பகஹ சந்தியிலும், ‘அப சரணய்’ சொல்லி கலவரத்தை தூண்டிய அளுத்கமையிலும் தற்போது வெகு விமர்சையாக நடைபெறுவதற்கு ஏற்பாடாகி இருக்கின்றன.
அந்தவகையில்,கடும்போக்காளர்களின் விஷம் கக்கும் நாகப்பாம்பு சின்னத்தை ஏந்திய கொடிகள் தர்ஹா நகரின் அம்பகஹ சந்தியில் பறக்க விடப்பட்டு இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
வழமையான அரசியல் பிரச்சார கூட்டங்களைப் போலன்றி, கடும் போக்காளர்களின் இந்த கூட்டத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அரச அங்கீகாரத்தில் நடைபெறும் ஒரு நிகழ்வு போல காட்சியளிப்பது ஒவ்வொரு முஸ்லிமையும் கவலை கொள்ளச் செய்கிறது. ஒரு அரச முக்கியஸ்தர் கலந்து கொள்ளும் நிகழ்வு போல விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் என இங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதானது மக்களிடத்தில் கேள்விக் கணைகளையும், சந்தேகங்களையும் தோற்றுவித்திருப்பதை அங்கிருக்கிற பொது மக்களின் கருத்துக்களினூடாக அறிந்து கொள்ள முடிகிறது.
கடந்த வருடம் ஜுன் மாதம் நடுப்பகுதியில் அளுத்கம-தர்ஹா நகர் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு பாரிய அழிவை ஏற்படுத்திய கடும்போக்கு அமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நல்லாட்சி அரசு எந்த முகாந்திரத்தில் இங்கே நடாத்த அனுமதி வழங்கியது என்பதை பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
முஸ்லிம்கள் நலனிலும், பாதுகாப்பிலும் இவ்வரசு அக்கறை காட்டுமாகவிருந்தால் இன்று நடைபெறும் இனவாதிகளின் கூட்டத்திற்கு அனுமதி வழங்கி இருக்க கூடாது. ஆனால், முழுப் பாதுகாப்பு பலத்துடன் கடும்போக்காளர்களை மறுபடியும் பாதிக்கப்பட்ட எமது பிரதேசங்களில் இனவாதம் பேச அனுமதித்திருப்பதானது நல்லாட்சி மீதான அபிமானத்தையும்,விசுவாசத்தையும் கேள்விக்குட்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற சம்பவமாகவே முஸ்லிம்கள் மனதை மீண்டும் ரணப்படுத்தும்.
எனவே, நல்லாட்சி இவ்விடயத்தில் கரிசனையற்று இருந்தாலும்- மதிப்புக்குரிய தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. தேர்தல் ஆணையாளர் இவ்வாறான இனவாதப் பிரச்சாரங்களுக்கும்- இனவாதத்தை தூண்டுகிற கட்சிகளுக்கு கூடிய சீக்கிரம் தடை விதித்து, முஸ்லிம்களின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்த வேண்டுமென தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
ஊடகப்பிரிவு

அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
சமூக சிந்தனையாளர்
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர்

Post a Comment

0 Comments