கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது சூழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுக்க முயற்சிகப்பட்டமைக்கான ஆதாரங்கள் உண்டு என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி நள்ளிரவு முதல் 9ம் திகதி அதிகாலை வரையில் இவ்வாறு சூழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள தாம் எவ்வித சூழ்ச்சிகளையும் மேற்கொள்ளவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட தலையீடு செய்ய நேரிட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி கூறியதாக, ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்ய முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் காவல்துறை மா அதிபர் வழங்கிய பங்களிப்பு பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர், முன்னாள் பிரான்ஸிற்கான தூதுவர் ஆகியோருக்கு தேர்தல் தினமன்று இரவு அலரி மாளிகையில் எந்தவிதமான காரியங்களும் செய்ய வேண்டிய அவசியமிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் பிரசன்னம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.சட்ட ரீதியான காரணங்களை காட்டி இரண்டு ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பதற்கு மஹிந்த தரப்பு தேர்தல் தினமன்று இரவு முயற்சி மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட பல விடயங்கள் சட்டத்திற்கு புறம்பானதல்ல என்ற போதிலும், ஜனநாயகத்திற்கு விரோதமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதிகாரி ஹிட்லரும் சட்ட வரையறைகளுக்கு உட்பட்டே செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.


0 Comments