வடக்கில் யுத்தம் நடந்துகொண்டிருக்கையில் கொழும்பில் கடற்படையினர் சட்டரீதியற்ற முறையில் ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளமைக்கு விசாரணையின் போது பல சான்றுகள் வெளிவந்துள்ளன.
தெஹிவளையில் கடத்தப்பட்ட ஐந்து மாணவர்கள் உட்பட கொழும்பு மாவட்டத்தில் 32 பேர் கடத்தப்பட்டு காணாமற்போனமைக்கு கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் காரணமாக இருந்துள்ளமைக்கும் சான்றுகள் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன என்று சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி தெஹிவளையில் 3 தமிழ் இளைஞர்களான மாணவர்களும் அவர்களது இரண்டு முஸ்லிம் நண்பர்களான மாணவர்களும் பயணம் செய்த வாகனத்துடன் கடத்தப்பட்டனர்.
இவ்வாறு கடத்தப்பட்ட மாணவர்களது பெற்றோர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை இவ்விசாரணை நடைபெற்றபோது தொகுப்புரை சமர்ப்பணத்திலேயே சிரேஷ்ட சட்டத்தரணி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தெகிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் மூன்று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் பயணம் செய்த வாகனத்தோடு கடத்தப்பட்டனர்.
கடத்தப்பட்டு காணாமல்போன மாணவர்களின் மூன்று மாணவர்களின் பெற்றறோர்களை மனுதாரர்களாக பெயர் குறிப்பிட்டு சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வேளையில் சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடத்தப்பட்ட மாணவர்களான ராஜீவ் நாகநாதன் பிரதீப் விஸ்வநாதன் திலகேஸ்வரன் ராமலிங்கம் ஆகியோரின் சார்பில் மனுதாரர்கள் மற்றும் சாட்சியங்கள் நிறைவுபெற்றதையடுத்து மனுதாரர்களின் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தனது சட்ட நிகழ்வுச் சமர்ப்பணத்தில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்ததாவது.
இந்த ஆட்கொணர்வு வழக்கு விசாரணையில் நான் மனுதாரர்களான கடத்தப்பட்ட மாணவர்களான ராஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம் ஆகியோரின் சார்பில் மனுதாரர்களான சரோஜா நாகநாதன், காவேரி ராமலிங்கம் விஸ்வநாதன் ஆகியோரும் மட்டுமின்றி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய எம்.ஏ ஜயதிலக, புலனாய்வுப்பிரிவின் பொறுப்பதிகாரியான ரஞ்ஜித் முனசிங்க புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா, புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியான ரஞ்ஜித் முனசிங்க புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா, கடற்படை கபிதான் சேனக பெரேரா, கொழும்புக் கோட்டை நீதிமன்றின் பதிவாளராகிய மானெலி சிறிமதி ஆகியோரை மனுதாரர்களின் சாட்சியாளர்களாக அழைத்து இவர்களது சாட்சியங்களை நெறிப்படுத்தியுள்ளேன்.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தனது பிரத்தியேக மெய்ப் பாதுகாவலராகவிருந்து பல விடயங்களில் செயற்பட்ட கடற்படையைச் சேர்ந்த லுதினன் கமாண்டர் சம்பத் முனசிங்கவிற்கு எதிராக பொலிஸ் மா அதிபருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டு விசாரணையில் வெளிவந்த பல முக்கியமான சான்றுகளும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவும் புலனாய்வுப் பிரிவினரும் கொழும்புக் கோட்டை நீதிமன்றில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கைகளும் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் முக்கிய திருப்பத்திற்கு முக்கிய காரணமாகும்.
லுதினன் கமாண்டர் சம்பத் முனசிங்கவிற்கு புலிகளுடன் தொடர்பு உண்டு என முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட பொலிஸ் மாஅதிபருக்கு செய்த முறைப்பாட்டை பொலிஸார் விசாரணை செய்த பொழுது தெஹிவளையில் கடத்தப்பட்டு காணாமல் போன 5 மாணவர்கள் உட்பட கொழும்பு மாவட்டத்தில் 32 பேர் கடத்தப்பட்டு காணாமல் போனமைக்கு கடற்படையை சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப் பட்டுள்ளமைக்கு சான்றுகள் வெளிக் கொண்டு வரப்பட்டுள்ள அதே வேளையில் லுதினன் கமாண்டர் சம்பத் முனசிங்க முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட பலரைக் கொலை செய்யும்படி தனக்கு கட்டளையிட்டுள்ளதாக கொழும்புப் புலனாய்வுப் பிரிவினருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கும் அவரது பிரத்தியேக மெய்ப் பாதுகாவலராகயிருந்த லுதினன் கமாண்டர் சம்பத் முனசிங்கவிற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளினால் பல விடயங்கள் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளமைக்கு இலங்கை கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகளே பொறுப்பு என்பதனை வாய்மூலச் சான்றாக மட்டுமின்றி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆகிய இருவரும் கொழும்புக் கோட்டை நீதிமன்றில் தாக்கல் செய்த 40 புலனாய்வு அறிக்கைகளினதும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகளையும் நீதிமன்றில் தாக்கல் செய்து சாட்சியங்களை நெறிப்புடுத்தியுள்ளேன்.
இந்த நீதிமன்றில் நெறிப்படுத்தப்பட்ட சாட்சியங்களில் மிக முக்கியமானதும் அவசியமானதுமான சில சான்றுகளை நினைவுபடுத்த விரும்புகின்றேன் என நீதிமன்றில் தெரிவித்து மேலும் தனது சமர்ப்பணத்தில் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் மனுதாரர்களான கடத்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் இந்த நீதிமன்றில் சாட்சியம் அளிக்கையில் தெகிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் கடத்தப்பட்ட சம்பவத்தையும் கடத்தியவர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைத்திருந்து விடுதலை செய்வதற்கு ஒரு கோடி ரூபா பணம் கேட்டதாகவும் சாட்சியம் அளித்துள்ளனர்.
குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்பொழுது உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றுபவருமான எம்.ஏ ஜயதிலக தனது சாட்சியத்தில்,
கொழும்புக் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் கொழும்பு குற்றப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சந்தேக நபரான கடற்படையைச் சேர்ந்த லுதினன் கமாண்டர் சம்பத் முனசிங்கவினால் பாவிக்கப்பட்ட அறையிலிருந்து முன்னாள் கடற்படைக் கொமாண்டரின் அடையாள அட்டை, 7.62 MM 105 வெடி குண்டுகள் 9 x 18- 32 வெடி குண்டுகள் -9MM ரக50 வெடி குண்டுகள் கொமர்ஷல் சம்பத் இலங்கை வங்கிகளின் சேமிப்புப் புத்தகங்கள்.
காசோலைகள் காணாமல் போனவர்களின் தேசிய அடையாள அட்டைகள், காணாமல் போனவர்களின் கடவுச்சீட்டுக்கள், சோனி எரிக்சன் சிம் அட்டைகள் உட்பட 21 தடயப் பொருட்களை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றி பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கமைய கொழும்பு புலனாய்வுப் பிரிவினருக்கு பாரம் கொடுத்ததையடுத்து மேலதிக விசாரணைகளை தாங்கள் நடத்தி விசாரணை அறிக்கைகளை கொழும்புக் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.
மேலும் கொழும்பு புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான ரஞ்ஜித் முனசிங்கவின் சாட்சியத்தை நெறிப்படுத்திய பொழுது தெகிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி ஐந்து மாணவர்கள் கடத்தல் சம்பவத்தில் கடற்படையைச் சேர்ந்த லுதினன் கமாண்டர் சம்பத் முனசிங்க தொடர்பு பட்டுள்ளமைக்கு சான்றுகள் உள்ளனவென இந்த நீதிமன்றில் சாட்சியம் அளித்ததுடன் விசாரணை அறிக்கைகளை கொழும்புக் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்
கொழும்புப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி நிசாந்தசில்வா இந்த விசாரணையில் மிகவும் முக்கிமான சாட்சியாவார்.
பொலிஸ் பரிசோதகர் நிசாந்தசில்வா தனது சாட்சியத்தில் மாணவர்களான ரஜீவ் நாகநாதன பிரதீப் விஸ்வநாதன திலகேஸ்வரன் ராமலிங்கம் மொகமட் தினேஸ் மொகமட் சாஜின் ஆகிய ஐந்து மாணவர்களும் தெகிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு கடற்படையினரால் கடத்தப்பட்டு கடற்படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் சைத்திய வீதியில் அமைந்துள்ள இரகசியதடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இந்த கடத்தல் சம்பவத்தில் கடற்படையைச் சேர்ந்த லுதினன் கொமாண்டர் சம்பத் முனசிங்க எட்டியாராச்சி கே.பி தசநாயக ரணசிங்க ஆராச்சி சுமித் ரணசிங்க ஆகியோரது கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இந்த நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.
மேலும் தனது சாட்சியத்தில் இந்தச் சம்பவத்தை பற்றிய விடயங்களை தெரிந்த சாட்சிகள் மட்டுமின்றி கடற்படையில் சேவை புரிந்த சில சாட்சிகளையும் விசாரணை செய்தமை மட்டுமின்றி கடத்தப்பட்ட மாணவர்களை தடுத்து வைத்திருந்த இடங்களான கொழும்புக் கோட்டையில் பிட்டுபம்பு என அழைக்கப்படும் இரகசிய தடுப்பு முகாமையும் திருகோணமலையில் கடற்படை முகாமிற்கு அருகாமையில் பாதாள சுரங்கம் போன்ற அமைப்பையுடைய இரகசியதடுப்பு முகாமுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று சாட்சியாளர்கள் 22 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாகவும் அந்த விசாரணையில் வெளிவந்த விடயங்களையே இந்த நீதிமன்றில் தெரிவிப்பதாகவும் சாட்சியம் அளித்துள்ளார்.
கொழும்பு பிர தான நீதிவான் நீதிமன்ற நீதிபதி கியான் பிலபிடிய மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி தவராசாவின் மேலதிக சட்ட நிகழ்வுச் சமர்ப்பணத்திற்காக செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
0 Comments