Subscribe Us

header ads

தொடர்ந்து 17 மணி நேரம் பயணிக்கும் விமான சேவை துபாயில் விரைவில்!



வழியில் எங்கேயும் தரை இறங்காமல் துபாயில் இருந்து புறப்பட்டு மத்திய அமெரிக்காவில் உள்ள பனாமா நகர் வரை சுமார் 17 மணிநேரம் 35 நிமிடங்களுக்கு பறந்து செல்லும் உலகின் நெடுநேர இடைநில்லா விமானச் சேவையை எமிரேட் விமான நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

வரும் ஆண்டின் (2016) பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள இந்த புதிய சேவைக்கான முன்பதிவு ஏற்கனவே எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்-ன் இணையதளம் மூலம் தொடங்கி விட்டதாகவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நீண்டநேர தொடர் பயணத்தை தாக்குப் பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘போயிங் 777 200LR’ ரக விமானத்தை இதற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் முதல் வகுப்புக்கு எட்டு இருக்கைகளும், பிஸ்னஸ் கிளாஸுக்கு 42 இருக்கைகளும், மீதமுள்ள 216 இருக்கைகள் எகானமி கிளாஸுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அன்றாடச் சேவையாக துபாயில் இருந்து புறப்படும் விமான எண்: EK251 உள்ளூர் நேரப்படி, காலை 8.05 மணிக்கு புறப்பட்டு, அமெரிக்க நேரப்படி அன்று மாலை 4.40 மணிக்கு பனாமா நகரை சென்றடையும்.

இதற்கு எதிர்திசையில் பனாமா நகரில் இருந்து தினந்தோறும் உள்ளூர் நேரப்படி இரவு 10.10 மணிக்கு புறப்படும் விமான எண்: EK252 துபாய் நேரப்படி, மறுநாள் இரவு 10.55 மணியளவில் இங்குவந்து சேரும் என எமிரேட்ஸ் விமானச் சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டெல்லாஸ் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கும் (சுமார் 17 மணி நேர பயணம்), தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பர்க் நகரில் இருந்து அமெரிக்காவின் அட்லாண்டா நகருக்கும் (சுமார் 16 மணி 40 நிமிட நேர பயணம்), துபாயில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கும் (சுமார் 16 மணி 35 நிமிட நேர பயணம்) மூன்று இடைநில்லா தொலைதூர மற்றும் நீண்ட நேர விமானச் சேவைகள் நடைமுறையில் உள்ளது.

இதற்கு முன்னதாக, சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் நகருக்கு சுமார் 19 மணி நேரம் பறந்து செல்லும் விமானச் சேவையை பெட்ரோல் விலை அதிகரிப்பை காரணம் காட்டி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டில் நிறுத்தி விட்டது.

இவற்றை வைத்துப் பார்க்கும்போது, வழியில் எங்கேயும் தரை இறங்காமல் துபாயில் இருந்து புறப்பட்டு பனாமா நகர் வரை சுமார் 17 மணிநேரம் 35 நிமிடங்களுக்கு பறந்து செல்லும் இந்த புதிய விமானச் சேவை விரைவில் உலகின் நெடுநேர இடைநில்லா விமானச் சேவையாக சாதனை படைக்கவுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments