இங்கிலாந்தைச் சேர்ந்த மேண்டி மெக்கொய்ர் (62) என்ற பெண்ணுக்கு பிள்ளைகள் எதுமில்லை. இதை எண்ணி பெரிதாக அவர் வேதனை அடையவும் இல்லை. இயல்பு வாழ்கையின் நடைமுறையை அனுபவப்பூர்வமாக நன்கு உணர்ந்துள்ள மேண்டிக்கு சொல்லிக்கொள்ளும்படி இருக்கும் ஒரே சொந்தம், சகோதரரின் மகள் மட்டுமே.
மேண்டி இறந்துப் போனால் அவரது இறுதிச் சடங்கை அந்தப் பெண்தான் முடிவு செய்யவேண்டும். அவருக்கு பிரச்சனை கொடுக்க விரும்பாத மேண்டி, தானே தனது இறுதிச் சடங்கு எப்படி நடக்க வேண்டும் என்று குறிப்பெழுதியுள்ளார். இது மட்டுமின்றி தனக்காக சவப்பெட்டியும் தயாரித்து வைத்து விட்டார்.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதை விரும்பாத மேண்டி, வெறும் அட்டைப் பெட்டியிலேயே சவப்பெட்டி செய்ய முடிவு செய்தார். அதற்கேற்ப, பூனைப்பிரியரான இவருக்கு பேப்பர் கழிவுகளைப் பயன்படுத்தி பூனை உருவத்துடன் கூடிய சவப்பெட்டியை செய்ய இவரது தோழி ஜீனா என்கிற கலைஞர் உதவியுள்ளார்.
மரத்தாலான சவப்பெட்டியை தயாரிப்பதற்கு சுமார் ஐந்து முதல் ஆறாயிரம் யூரோக்கள் செலவாகும். இவ்வளவு செலவு செய்தாலும் அது ஒன்றுக்கும் உதவாமல் மண்ணில் மக்கி, அழியத்தான் போகிறது. ஆகையால், இப்படி ஒரு முடிவெடுத்ததாக மேண்டி கூறுகிறார்.
இந்த சவப்பெட்டி மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்த மேண்டி, அதை தற்போது தன்னுடைய வீட்டின் முன்புற தோட்டத்தில் வைத்துள்ளார்.



0 Comments