தென் அமெரிக்க நாடுகளில் ஒருவார கால சுற்றுப்பயணம் மேற்கொண்ட போப் ஆண்டவர், வாடிகனுக்கு திரும்பும் முன், பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்து தன்னை சந்திக்க வந்த பத்திரிக்கையாளர்களை சிரிக்க வைத்துள்ளார்.
ஈக்வடார், பொலிவியா, பராகுவே ஆகிய மூன்று நாடுகளில் கடந்த திங்கள் கிழமை முதல் உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவர் போப் பிரான்சிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த வியாழக்கிழமை பொலிவியா வந்தடைந்த போப் பிரான்சிஸ், அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் முன்பு உரையாற்றினார்.
தொடர்ந்து ஈக்வடார் சென்ற அவர் தமது பயணத்தை பராகுவேயில் முடித்துக்கொண்டு, நேற்று முன்தினம் அசுன்சியான் விமான நிலையத்தில் இருந்து வாடிகன் புறப்பட்டார். முன்னதாக விமான நிலையத்தில் குழுமியிருந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் போப் பிரான்சிஸுக்கு பிரியாவிடை அளித்தனர். மேலும், போப்பிடம் பேசுவதற்காக திரளான பத்திரிக்கையாளர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
அப்போது ஒருவர், 78 வயதான போப்பிடம், நீங்கள் இந்த வயதிலும் எப்படி மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் உற்சாகமாக உரையாற்றுகிறீர்கள்? என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த போப், “ ஏனென்றால் நான் எந்த போதை மருந்துகளையும் உபயோகித்ததில்லை.” என்றார். இதைச் சொன்ன அடுத்த நொடியே, “ ஏனென்றால், நான் போதை மருந்துகளை உபயோகப்படுத்துகிறேன். என்று பதிலளிப்பதையே நீங்கள் விரும்பியிருப்பீர்கள்... அப்படித்தானே...” என்று கேட்டு அனைவரையும் சிரிக்க வைத்தார்


0 Comments