Subscribe Us

header ads

உலகை உலுக்கிய சொதப்பல் ஆபரேஷன்கள்...


இருபதாம் நூற்றாண்டிலும் சிலர் இன்னும் ஒரு ஊசி குத்திக்கொள்ள கூட பயந்து மருத்துவரிடம் போகாமல் தனக்குதானே சிகிச்சை செய்து கொள்வதுண்டு. மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பத்தில் தற்போது எவ்வளவோ முன்னேற்றங்கள் பெருகிவிட்டன. 

பூசுமஞ்சள் வாங்க மளிகைக் கடைக்கு போவதுபோல தங்களது இல்லாத அழகை மேம்படுத்திக் கொள்வதற்காக 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்துகொள்ள இப்போது இளம்வயது பெண்கள் டாக்டர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கோணல் மூக்கை நேராக்குவது, பெருத்துப் போன இடையை குறுக்கி, சுருக்கி 'இஞ்சி இடுப்பழகி' ஆவது, செயற்கை மார்பகங்களுக்கு சிலிக்கான் சிகிச்சை அளிப்பது, உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக இன்று லட்சக்கணக்கான பெண்கள் தகுதியும், திறமையும் வாய்ந்த டாக்டர்களை தேடி வருகின்றனர். 

இந்நிலையில், எல்லா துறைகளிலும் சில சொதப்பல் பேர்வழிகள் இருப்பதுபோல், சில வேளைகளில் டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சைகளும் தவறாக முடிந்து விடுவதுண்டு. இதில், மிகவும் மோசமான ஐந்து சொதப்பல் சிகிச்சைகள் பற்றிய தகவல் திரட்டு ஆங்கில இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரை சேர்ந்த விஷால் தாக்கர் என்ற இந்திய வம்சாவளியினர், தனது மூக்கு விகாரமாக உள்ளது என்று கூறி மனைவி விவாகரத்து கொடுத்த வேதனையில் மனம் உடைந்துப்போய் இருந்தார். அடுத்த திருமணத்துக்கு தயாராவதற்கு முன்னர், கோணல் மூக்கை அழகுபடுத்திக் கொள்ள விரும்பி ஓக்லஹோமாவின் மிகப் பிரபலமான பிளாஸ்டிக் சர்ஜனிடம் சென்றார். 

ஆபரேஷன் டேபிளில் மயக்கம் தெளிந்து அவர் விழித்துப் பார்த்தபோது, அந்த கோணல் மூக்கும் காணாமல் போனதை கண்டு பதறிப்போனார். மயக்கத்திலிருந்த விஷாலின் மூக்கில் நோய்த்தொற்று இருந்ததால் அவரிடம் அனுமதி பெறாமலேயே மூக்கை நீக்கிவிட்டதாக அந்த மருத்துவர் கூறியுள்ளார். 

லிண்டா என்ற பெண்ணுக்கு முற்றிய நிலையில் மார்பகப் புற்றுநோய் இருந்ததால் அவரது இரு மார்பகங்களையும் நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மார்பகங்கள் இரண்டும் அகற்றப்பட்டு அவர் மேல்சிகிச்சை பெற்றுவந்தபோது, அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. 

லிண்டாவுக்கு புற்று நோயே இல்லை. வேறொரு பெண்ணின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை பார்த்து,  அவருக்கு தவறான சிகிச்சையும், அதற்கு பின்னர் தேவையற்ற அறுவை சிகிச்சையும் நடத்தப்பட்டது, தாமதமாகவே தெரியவந்தது. 

மனைவி நான்காவது முறை கருத்தரித்தபோது, வீட்டில் இனியும் ஜனத்தொகை பெருகிப் போனால் கட்டுப்படியாகாது என கருதிய டேனியல் ஸ்டாக்கர் கருத்தடை செய்துகொள்ள முடிவு செய்தார்.

ஆபரேஷனின்போது மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பின்னும் அவர் வலியை உணர்ந்தார், 'காகத்தின் வலி எருதுக்கு தெரியுமா..?' என்பதுபோல் அவர் முக்கி, முக்கி வாந்தி எடுக்கும்வரை தனது கடமையில் கண்ணாக இருந்த அந்த டாக்டர், ஒருவழியாக அந்த ஆபரேஷனை செய்து முடித்தபோது டேனியல் ஸ்டாக்கரின் ஒரு விதை இரு மடங்கு பெரிதாகி, கருத்தும் போனது. 

இதனால், அவரது இரு விதைகளும் அழுகிப்போய், அகற்றியே தீர வேண்டிய துர்பாக்கிய சூழ்நிலையும் ஏற்பட்டுப் போனது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த வில்லி கிங் என்பவருக்கு நோய் உச்சகட்டத்தை அடைந்த நிலையில் அவரது ஒரு காலை நீக்கினால் உயிர் பிழைக்கலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, புளோரிடா மருத்துவமனையில் நடந்த ஆபரேஷனின்போது டாக்டர்களின் கவனக்குறைவால் இடது காலுக்கு பதிலாக வலது காலை அவர் இழந்தார். இந்த தவறுக்கு புளோரிடா மருத்துவமனை நிர்வாகம் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

அந்தப் பணத்தில் நீக்கப்பட வேண்டிய தனது மற்றொரு காலையும் அகற்றிக் கொண்ட வில்லி, இரு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளியாகவே மாறிப்போனார். 

மெக்சிகோவைச் சேர்ந்த ஜெசிகா சாந்திலன் என்ற இளம்பெண், இதயம் மற்றும் நுரையீரல் மாற்று ஆபரேஷனுக்காக சென்றார். அந்த ஆபரேஷன்களின்போது, வேறோரு ரத்தப் பிரிவைச் சேர்ந்த நபரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாற்று உறுப்புகள் அவருக்கு பொருத்தியதன் விளைவாக ஆபரேஷன் முடிந்த இரண்டே வாரங்களில் அவர் பரிதாபமாக பலியானார். 

இந்த ஐந்து சொதப்பல் சிகிச்சைகளும் உலக ஊடகங்களின் கவனத்தை ஒருகாலத்தில் கவர்ந்த நிகழ்ச்சிகளாகும் என இதுபற்றிய தகவல்களை தற்போது பதிவு செய்துள்ள அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.





Post a Comment

0 Comments