ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகளின் தலைவர்கள் தமது பதவிக் காலத் தவணை முடிவடைகையில் பதவி விலக மறுக்கும் பட்சத்தில் அந்தக் கண்டம் முன்னேற்றமடைய முடியாது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார்.
எவருமே வாழ்க்கை முழுவதும் ஜனாதிபதியாக இருக்க முடியாது என அவர் கூறினார்.
எதியோப்பிய தலைநகர் அட்டிஸ் அபாபாவிலுள்ள ஆபிரிக்க ஒன்றியத் தலைமையகத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேற்படி எதியோப்பிய விஜயத்தின் முன்பாக தனது தந்தையின் பிறப்பிடமான கென்யாவுக்கு சென்றிருந்தார்.
"ஏன் சிலர் நீண்ட காலம் பதவியில் நிலைத்திருக்க விரும்புகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது" எனத் தெரிவித்த பராக் ஒபாமாஇ நாடுகளின் தலைவர்கள் தமது அரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பதையும் தமது பதவிக்கான தவணைக் காலம் முடிவடையும் போது பதவி விலகுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என ஆபிரிக்க ஒன்றியத்துக்கு அழைப்பு விடுத்தார்.
“சில சமயங்களில் தலைவர்கள்இ 'இந்தத் தேசத்தை ஐக்கியப்படுத்தக் கூடிய ஒரே நபர் நானே' என கூறுவதை நீங்கள் கேட்கலாம். அது நிஜமானால் அந்தத் தலைவர்கள் தமது தேசத்தை உண்மையில் கட்டியெழுப்பத் தவறியுள்ளனர்" என பராக் ஒபாமா கூறினார்.
“நான் என்னை ஒரு சிறந்த ஜனாதிபதி ஒருவர் என்றே கருதுகிறேன். நான் பதவிக்காக போட்டியிட்டால் வெற்றி பெறுவேன் என நினைக்கிறேன். ஆனால் என்னால் அது முடியாது.” என அவர் மேலும் தெரிவித்தார்.
தமது தவணைக் காலத்தை விட தலைவர்கள் தமது பதவிகளில் நீடித்திருப்பது சட்டத்திற்கு அப்பாற்பட்டது எனத் தெரிவித்த பராக் ஒபாமா அதற்கு உதாரணமாக புரூண்டியைக் குறிப்பிட்டார்.

0 Comments