பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் தொடர்பிலான இறுதியான பிரேத பரிசோதனை அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் நேற்று சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் சட்ட வைத்திய அதிகாரியை திறந்த மன்றில் சாட்சியமளிக்கச் செய்து அதனை ஒழுங்குபடுத்துவது குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிவித்தார்.
றக்பி வீரரின் மரண விசாரணை தொடர்பிலான வழக்கு நேற்று தொடர்ச்சியாக இரண்டாவது நாளும் விசாரணைக்கு வந்தபோதே நீதிவான் நிஸாந்த பீரிஸ் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணம் வாகன விபத்தால் ஏற்படவில்லை எனவும் அது ஒரு கொலை என சந்தேகிக்கும் படியாக உள்ளது எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
பற்கள் உடைக்கப் பட்டு, முதுகெலும்பு முறிக்கப்பட்டு, குதி கால் பகுதியில் உள்ள எலும்பும் உடைக்கப்பட்டு, கூரிய ஆயுதத்தால் கழுத்தில் குத்தியும், தட்டையான ஆயுதம் ஒன்றினால் தாக்கியதாலும் றக்பி வீரரின் மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் அதற்கான தழும்புகள் மற்றும் அடையாளங்கள் அவரது சடலத்தில் இருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அறிக்கை சமர்ப்பித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றுமுன்தினம் அறிவித்தனர்.
தாஜுதீன் மரணம் தொடர்பில் மரண விசாரணை நடத்திய முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர இடைக்கால அறிக்கை ஒன்றை மாத்திரமே சமர்ப்பித்ததாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
எனவே, பூரண மரண விசாரணை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கேட்டுக் கொண்டனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ், இறுதியான முழுமையான மரண விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆனந்த சமரசேகரவுக்குத் தெரிவித்தார். மேலும் தாஜுதீன் மரணம் தொடர்பில் மரண விசாரணை நடத்திய நான்கு சட்ட வைத்திய அதிகாரிகளையும் நீதிமன்றில் அழைத்து சாட்சி பெற வேண்டும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அதனையும் அன்றைய தினம் மன்றுக்கு தெரியப்படுத்தும் படி நீதிவான் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிவித்தார். வெள்ளவத்தை முருகன் வீதியை வதிவிடமாகக் கொண்ட வஸீம் தாஜுதீன் கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலிகா மைதானம் அருகே மதில் ஒன்றுடன் மோதியவாறு எரிந்து கொண்டிருந்த காரில் இருந்து கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாரஹேன்பிட்டி பொலிஸாரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரும் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
எனினும் இரு வருடங்கள் கழிந்தும் அது தொடர்பிலான விசாரணைகள் நிறைவுறாத நிலையில் றக்பி வீரர் தாஜுதீனின் மரணத்தில் மர்மம் நீடித்தது.
இந் நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் இது தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பாரப்படுத்தப்பட்டன. பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் நேரடி கட்டுப்பாட்டில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நாகஹமுல்ல ஆகியோரின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் தலைமையிலான பொலிஸ் குழு இந்த விசாரணைகளை முன்னெடுத்தது.
மர்மமான முறையில் உயிரிழந்திருந்த வஸீம் தாஜுதீனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது நுரையீரலுக்குள் காபன் மொனோக்சைட் வாயு நிரம்பி இருப்பது கண்டறியப்பட்டிருந்த நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக கூறப்பட்டு அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கும் மேலதிக பரிசோதனைகளுக்காக பாகங்கள் அனுப்பப்பட்டன.
எனினும் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பிலான அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கடந்த பெப்ரவரி மாதமே பொலிஸாருக்கு கிடைத்தது. அந்த அறிக்கை ஊடாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் தாஜுதீனின் மரணம் குறித்து தெளிவான ஒரு விடயத்தை முன் வைக்க முடியாது என குறிப்பிட்டிருந்தார். இந் நிலையில் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட அப்போதைய அரசின் பிரதான சட்ட வைத்திய அதிகாரியான ஆனந்த சமரசேகர, இரசாயன பகுப்பாய்வுகளை நடத்திய சிரேஷ்ட உதவி இரசாயன பகுப்பாய்வாளர் ரொஷான் பெர்னாண்டோ ஆகியோரை நீதிமன்றில் பெற் றுக்கொண்ட அனுமதிக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்குட்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான அடுத்த கட்ட விசார ணைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

0 Comments