இங்கிலாந்தின் மேற்கு லண்டன் பகுதியில் மரத்தில் மாட்டிக்கொண்ட தனது பூனையைக் காப்பாற்றக் கோரி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார் ஒரு பெண். தீயணைப்புத் துறையினர் அந்த பூனையை பிடிக்க முயற்சித்ததும் அது பயத்தில் மேலும் உயரமாக மரத்தில் ஏறியது.
இதையடுத்து மரம் ஏறுபவர் வரவழைக்கப்பட்டு, அந்த பூனையை பிடித்தனர். அந்த பூனையை பிடித்தபின் தான் அது தன்னுடைய பூனை இல்லை என்பது அந்த பெண்ணுக்கு தெரிந்தது. எனினும், பசியில் இருந்த அந்த பூனைக்கு உணவளித்து பார்த்துக் கொண்டார்.
காலையில் அந்த பூனை அந்த வீட்டை விட்டு கிளம்பிப்போனது. மீண்டும் அந்த பூனை அதே மரத்தில் ஏறி மாட்டிக் கொண்டது. ஆகவே, பூனையைக் காப்பாற்ற எல்லோரும் திரும்பவும் வரவழைக்கப்பட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின் அந்தப் பூனையை மீண்டும் மரத்திலிருந்து கீழே இறக்கி உள்ளனர்.
இச்சம்பவத்தால், கடுப்பான தீயணைப்புத்துறை அதிகாரிகள், செல்லப் பிராணிகளை அவரவர் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்களுக்கு தீயணைப்புத் துறையை தொந்தரவு செய்யக்கூடாது. ஏனெனில் அவர்கள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவதால், உண்மையில் அவசர தேவையான இடங்களுக்கு செல்ல முடியாமல் போகலாம் என்று மக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த பூனையின் உரிமையாளர் யார்? என்பது இன்னும் விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. இந்த பூனையால் லண்டன் நிர்வாகத்திற்கு ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் செலவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments