சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள மு.கா. வேட்பாளர் ஷிப்லி பாறூக்கின் தேர்தல் சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்
காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
பொறியியலாளர் ஷிப்லி பாறூக், தனது பிரச்சார மேடைகளில் நல்லாட்சி குறித்து
மணிக்கணக்கில் உரையாற்றி வருகின்ற அதேசமயம், அவரது தேர்தல் விளம்பர
சுவரொட்டிகள் காத்தான்குடிப் பிரதேசத்தில் சட்டத்திற்கு புறம்பான வகையில்
பரவலாக ஒட்டப்பட்டிருப்பதாக நல்லாட்சியை விரும்பும் வாக்காளர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது விடயத்தில் காத்தான்குடிப்
பொலீசாரும், தேர்தல் திணைக்கள அதிகாரிகளும் கண்மூடித்தனமாக இருக்காமல்
துரிதமாக செயற்பாட்டில் இறங்கி இச்சுவரொட்டிகளை அழிக்கதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் எனவும் வரியிறுப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
முன்னதாக, வேட்புமனுக்கள் தாக்கல்
செய்யும் இறுதித் தினத்திற்கு முன்னிரவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,
ஐ.ம.சு.கூட்டமைப்பு வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மட்டக்களப்பு
மாவட்டம் முழுவதும் அவரது தேர்தல் விளம்பரச் சுவரொட்டிகளை இரவோடிரவாக
ஒட்டி மட்டக்களப்பு மாநகரம் உட்பட பல்வேறு பிரதேசங்களையும் வெகுவாக
அசிங்கப்படுத்தியிருந்தார்.
எனினும் அது குறித்து ஊடகங்களும், சக
வேட்பாளர்களும் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்குச்
சுட்டிக்காட்டியதையடுத்து, பொலீசார் தீவிரமாகக் களத்தில் இறங்கி அவற்றை
அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். இதனையடுத்து அவர் புதிதாக தனது
தேர்தல் விளம்பரச் சுவரொட்டிகளை ஒட்டவில்லை என்றும் பொதுமக்கள்
தெரிவித்தனர்.
நல்லாட்சியை விரும்பி கடந்த ஜனவரி 08ம்
திகதி வாக்களித்த மக்கள், அந்த நல்லாட்சியை வலுப்படுத்துவதற்காக தமது
வாக்குகளைக் கேட்டு நிற்கும் வேட்பாளர்கள் நாட்டின் சட்டத்தையும்,
ஒழுங்கையும் மதிக்கின்றவர்களா? என்பதைக் கண்டறிவதிலும் மிக விழிப்பாக
இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments