அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர் அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்தால் கடன் அதிகமாக கூடிவிடும் என்பதை கருத்தில் கொண்டு கல்லூரிக்கு அருகாமையில் உள்ள அகன்ற புல்வெளியில் சுமார் ஓராண்டு காலம் உழைத்து, சொந்தமாக ஒரு நடமாடும் மர வீட்டை உருவாக்கியுள்ளார்.
இந்த பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஜோயல் வெப்பர் (25) தனது குடும்பம் சற்று ஏழ்மை நிலையில் உள்ளதை கருத்தில் கொண்டு கல்லூரிக்கு அருகில் வாடகை வீட்டில் குடியேறுவதை தவிர்த்து விட்டார். அந்தப் பகுதியில் ஒரு சிறிய வீட்டுக்கே சுமார் 800 டாலர்கள் வாடகை தர வேண்டும் என்பதை கணக்கிட்டு பார்த்து, வாடகை வீட்டில் வாழ்ந்தால், அதற்காக கடன் வாங்கி, அந்த கடனை அடைக்க எதிர்காலத்தில் கஷ்டப்பட வேண்டி இருக்கும் என்பதை புரிந்து கொண்டார்.
கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வசதியானவர்களின் வீடுகளில் புல்தரைகளை சீர்படுத்தும் பணி, குழந்தைகளை பராமரிக்கும் ‘பேபி சிட்டிங்’ வேலை என கவுரவம் பார்க்காமல் கிடைத்த வேலையை எல்லாம் தட்டாமல் செய்து, இரண்டு ஆண்டுகளாக சிறுகச்சிறுக சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் சில நல்ல உள்ளங்கள் அளித்த மூலப்பொருட்களை கொண்டு சுமார் 20 ஆயிரம் டாலர்கள் செலவில் உருவாக்கிய இந்த 145 சதுரடி வீட்டை இரண்டு பரண்களாக (தளம்) இவர் பிரித்துள்ளார்.
முழுமையான கழிப்பறை, மின்வசதி, கியாஸ் அடுப்புடன் கூடிய சமையல் அறை, குளிப்பதற்கு ஷவர், கட்டிலுடன் அமைந்த படுக்கையறை என ஒரு உல்லாச விடுதிக்குரிய அத்தனை அம்சங்களுடன் இந்த மரவீட்டை இவர் மிக அழகாக உருவாக்கியுள்ளார். இந்த மரவீட்டை எங்கு வேண்டுமானாலும் நகர்த்தி செல்லும் அளவுக்கு நான்கு சக்கரங்களையும் பொருத்தியுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனது சொந்த ஊரான டல்லாஸ் பகுதியில் இந்த நடமாடும் வீட்டை நிறுத்தி வாழ்ந்துவரும் ஜோயல் வெப்பர் வரும் கல்லூரி விடுமுறையின்போது இங்கிருந்து சுமார் 200 மைல் தூரத்தில் உள்ள ஆஸ்டின் நகருக்கு நகர்த்தி செல்ல திட்டமிட்டுள்ளார்



0 Comments