-Inamullah Masihudeen-
எதிர்வரும் பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி முன்னெடுப்புக்கள் ஒரு ஜனாதிபதித் தேர்தலோடு முடிவுக்கு கொண்டு வரப்படுவதனை அனுமதிக்க முடியாது, என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள்சுதந்திர முன்னணியினது தலைவர் கௌரவ மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் நல்லாட்சிக்கான ஐக்கியதேசிய முன்னணியின் தலைவர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரதமாராகவும் கொண்ட ஒரு தேசிய அரசாங்கம் அமைவதனையே நான் விரும்புகின்றேன்.
பிரதான இடதுசாரி அணியினரான ஜேவீ பீ மக்கள் விடுதலை முன்னணி அடுத்த பாராளுமனறத்தில் பலமான அழுத்தக் குழுவாக இருக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இனமத வெறிக் குழுக்கள் அன்றி அவர்களே மூன்றாவது பலம் வாய்ந்த அரசியல் அணியாக இருக்கவேண்டும் எனவும் விரும்புகின்றேன்.
கிழக்கிலங்கை அரசியலைப் பொறுத்தவரை அங்கு அதிகபட்ச மக்கள் ஆதரவை பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கூட்டணி புதியதோர் அரசியல் பாதையில் பயணிக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் கணிசமான அளவு இளைஞர்களுக்கு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் சந்தர்ப்பங்கள் வழங்கப்படல் வேண்டும் எனவும் விரும்புகின்றேன்.
தேசிய ஷூரா சபை ஆளும் எதிர்க்கட்சிகளிடம் முஸ்லிம் சமூகம் சார்பாகவும்தேசியநலன்கள் சார்பாகவும் முன்வைத்துள்ள கோரிக்கைகளை தாம் சார்ந்த அரசியல் அணியூடாக வென்றெடுப்பதில் சகல முஸ்லிம் அரசியல் வாதிகளும் கவனம் செலுத்துதல் கட்டாயமாகும்.
எல்லா மாவட்டங்களிலும் குறிப்பாக முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள், அரசியல் தலைவர்களுடன் சுமுகமான உறவுகளைப் பேணுவதிலும் உரிய கவனம் செலுத்துதல் வேண்டும்.
எல்லா முகாம்களிலும் எனது நண்பர்களே அதிகமாக இருப்பதனால் ஒரு சிலரை பெயர் கூறி ஆதரவு தெரிவிக்க முடியாத நிலையில் இருக்கின்றேன்.
முகங்களுக்கும் முகாம்களுக்கும் அப்பால் எந்தக் குதிரை வெல்கின்றது என்பதனை விடவும் எந்தக் கொள்கை வெல்கின்றது என்ற விடயத்தில் மாத்திரமே இப்போதைக்கு என்னால் கருத்துக் கூற முடிகின்றது.
தற்பொழுதுள்ள தேர்தல் முறைகளின் படி எம்மீது திணிக்கப்படுகின்ற வேட்பாளர்களில் எவரையேனுமே தெரிவு செய்யும் கட்டாய நிலை தான் எமக்கிருக்கின்றது, எதிர் வரும் காலங்களில் எமது தொகுதிக்கும் மாவட்டத்திற்கும் மிகவும் பொருத்தமான வேட்பாளர்களை நாமே முற்படுத்துகின்ற புதிய தேர்தல் முறை மற்றும் சமூக நடைமுறைகளில் நாம் கவனம் செலுத்துவோம், இன்ஷா அல்லாஹ்.


0 Comments