கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவருக்கு உலகமே வியக்கும் வண்ணம் 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உருவச்சிலையை ராமேசுவரம் தீவில் உள்ள பாம்பன் கடலில் நிறுவி இருப்பதுபோன்ற தோற்றத்தில், கற்பனை புகைப்படம் ‘வாட்அப்’பில் பரவி வருகிறது.
இப்படி ஒரு சிலை இந்த இடத்தில் இருந்தால் இந்தியாவுக்கு பெருமை. ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் அந்த சிலையை பார்த்து பிரமிப்பு அடைவார்கள். இதுபோன்ற தோற்றத்தில் சிலை நிறுவ வேண்டும் என்று அதனை விளக்கும் மாதிரி புகைப்படத்தை உருவாக்கியவர் பற்றிய தகவல் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், இந்த புகைப்படம் சாலிகிராமத்தைச் சேர்ந்த இம்ப்ரஸ் ஸ்டில்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெயக்குமாரின் சிந்தனையில் உதித்தது என தெரியவந்துள்ளது.
மக்கள் ஜனாதிபதி கலாமின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் பிறந்த மண்ணில் அவருக்கு சிலை வைத்தால் எப்படி இருக்கும்? என்ற கற்பனையில் இந்த படத்தை உருவாக்கிய ஜெயக்குமார், இதனை பேஸ்புக்கில் நேற்று பதிவிட்டிருந்ததாகவும், அது சமூக வலைத்தளம் மூலம் பரவி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஒரிஜினல் புகைப்படங்களில் அவரது பெயரும், படங்களை வடிவமைத்த கிராபிக் டிசைனர் சகாய வினோவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் ரெயில் பாலத்தின் நூற்றாண்டு விழா தென்னக ரெயில்வே சார்பில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசும்போது, பாம்பன் பாலத்தால் 3 பகுதிகளை சேர்ந்த (பாம்பன், தங்கச்சி மடம், ராமேசுவரம்) பல லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள் என்றும், இந்த ரெயில் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் ராமேசுவரம்–சென்னை அகல ரெயில்பாதை அமைப்பதற்கும் அப்துல் கலாம் தூண்டுகோலாக இருந்தார்.
எனவே, பாம்பன் கடலில் அப்துல் கலாமின் பிரமாண்ட சிலையை நிறுவ வேண்டும் என்ற இந்த கற்பனை புகைப்படம் உயிரோட்டம் பெறவேண்டும் என்பதே இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


0 Comments