முன்னாள் ஜனாதிபதி, தேர்தலில் போட்டியிட இடமளித்தமை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முடிவாகும். இதற்கு மக்கள் உரிய பதிலை வழங்குவார்கள்.
நல்லாட்சியை உறுதிப்படுத்தி சமாதான சூழலை ஏற்படுத்துவதே எமது இலக்கென ஜாதிக்க ஹெலஉருமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்கரணவக்க தெரிவித்துள்ளார்.
வடபிராந்தியத்திற்கான இலங்கை மின்சார சபை தலைமைச் செயலகத் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்த அமைச்சரிடம் அந்நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களின் வினாவுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும். மக்களின் சிந்தனைகளில் மாற்றங்கள் அவசியம். சமாதானமான நிலைமைகள் தொடர்வதற்குரிய சூழல்கள் தொடர்ந்தும் அமையவேண்டும். இளம் சமுதாயத்தினரிடம் இவ்வாறான சிந்தனைகள் வெ ளிப்பட்டு அவை ஆக்கபூர்வமாக முன்னெடுக்கப்படவேண்டும்.
புதிய அரசியல் கலாசாரமொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். குறிப்பாக நல்லாட்சி, சமஉரிமை, சமாதானத்தை மையப்படுத்தியதாக அது அமையவேண்டும். இதற்கான சூழலை ஏற்படுத்துவதற்காக நாம் போராடுவதற்குத் தயாராக இருக்கின்றோம். இதுவே எமது நிலைப்பாடாகும்.
இதற்கான அழுத்தங்களை நாம் வழங்கவுள்ளோம். இந்த இலக்கை அடைவதற்காக நாட்டின் பிரஜைகள் அனைவரும் ஒன்றுபட்டு அர்ப்பணிப்புடன் எம்மோடு கைகோர்க்கவேண்டும்.பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வாய்ப்பு வழங்கியமை அவர்களுடைய தீர்மானமாகும். அவர் போட்டியிட்டால் மக்களே அதற்குரிய பதிலடியை வழங்குவார்கள் என்றார்.


0 Comments