திருமண பருவத்தில் இருக்கும் மகனிடம், ‘உனக்கு பெண் பார்த்து கல்யாணம் செய்துவைக்கட்டுமா?’ என்று கேட்டால், ‘நான் திருமணம் செய்துகொண்டால் எனக்கு என்ன பலன் என்று சொல்லுங்கள்?’ என்று பல இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் எதிர்கேள்வி எழுப்புகிறார்கள்.
அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று பெற்றோர் குழம்ப வேண்டியதில்லை. ‘நீ திருமணம் செய்துகொண்டால் உனக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்’ என்று கூறுங்கள். புதிய ஆய்வு ஒன்றில் இந்த உண்மையை கண்டறிந்திருக்கிறார்கள்.
‘வெற்றி பெற்ற ஆண்களுக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள்’ என்ற உண்மையை இந்திய பெண்கள் ஏற்கனவே மெய்ப்பித்து காட்டியிருந்தாலும், இப்போதுதான் அந்த உண்மை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
பெண்கள் எப்போதுமே மனோதிடம், துணிச்சல், ஆன்மபலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மனப்பூர்வமான ஜோடியாக அவள், கணவரோடு இணையும்போது அவளது சக்தியும், ஆலோசனையும் கணவருக்கு கிடைக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் ஆண்கள் வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். இந்த உண்மையை இளைஞர்களிடம் புரியவைக்கவேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. புரிந்துகொண்டால், அவர்கள் திருமணம் செய்துகொண்டு, மணவாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றியை நோக்கி நகரத் தொடங்கிவிடுவார்கள்.
‘மணவாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளும் இருக்கத்தானே செய்கிறது?’ என்ற கேள்வி எழும்புவது இயல்புதான்.
வாழ்க்கை என்பது பிரச்சினைகளை கடந்துவந்து வெற்றிகாண்பதுதான். பிரச்சினைகளை கடந்து வெற்றிபெறும்போது நாம் புதிய பலம் பெறுகிறோம். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் ஆகிறோம். ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் பிரச்சினை என்பது எப்போதும் இருக்கும். திருமணமானாலும் இருக்கும். திருமணமாகாவிட்டாலும் இருக்கும். திருமணத்திற்கு பின்னால் வரும் பிரச்சினைகளை மனைவி உதவியோடு முறியடிக்கலாம் என்பதுதான் புதிய செய்தி.
திருமணத்திற்கு பின்னால் பலர் சாதனையாளர்களாக உருவெடுத்திருக்கிறார்கள். புகழ்பெற்ற தொழிலதிபர் திருபாய் அம்பானி தன்னுடைய வாழ்க்கை சரித்திரத்தில், தன் மனைவி கோகிலா தனக்கு கொடுத்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பற்றி எழுதியிருக்கிறார். ‘ஒவ்வொரு தோல்வியிலும் தன்னை தூக்கி நிறுத்திய கோகிலாதான் பின்பு தனக்கு கிடைத்த வெற்றிகளுக்கெல்லாம் காரணம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
திருமணத்திற்கு பின்பு கணவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் மனைவிக்கு பெரும் பங்கு உள்ளது. அமிதாப்பச்சன் ‘ஜன்ஜீர்’ சினிமாவிற்கு பின்பு ஜெய பாதுரியை திருமணம் செய்துகொண்டு வெற்றி சிகரத்தை தொட்டார். திருமணத்திற்கு பிறகு ஷாருக்கான் படங்கள் சூப்பர் ஹிட் ஆயின.
இந்தியா
வில் இப்படி ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்க, அமெரிக்காவிலும் நிலை அதுதான். பில்கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்தபோது உலகமே அவரை வியந்து பார்த்தது. பின்பு அவர் தனது உதவியாளர் மோனிகா லெவின்ஸ்கியுடன் தகாத உறவு வைத்ததும், உலகத்தின் முன்னால் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது.
மிகுந்த உயரத்திலிருந்து விழுபவர்கள் உயிர்பிழைப்பது கடினம். அதுபோன்றுதான் பில்கிளிண்டனின் மானத்தின் நிலையும் ஆனது. உலகமே அவரது அந்தரங்கங்களை வெளிப்படுத்தி, அவரை சொல்லமுடியாத வேதனைக்கு உள்ளாக்கியது.
விரக்தியின் விளிம்பில் நின்ற அவரை மனைவி ஹிலாரி கிளிண்டன் ஆறுதல்படுத்தினார். அமைதிப்படுத்தினார். தன்னம்பிக்கைகொடுத்தார். அவரை அந்த நிலையில் இருந்து மீண்டெடுத்து, இயல்பு நிலைக்கு கொண்டுவந்தார். ‘‘அது என் கணவரின் புகழை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. அதில் சிறிதும் உண்மையில்லை’’ என்று வாதாடினார்.
மனைவியின் இந்த பேச்சு கிளிண்டனுக்கு ஆறுதலை கொடுத்தது. அடுத்து கணவருக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் பேச்சை தொடங்கினார். ‘‘ஒருவேளை அந்த குற்றச்சாட்டு உண்மையாகவே இருந்தாலும் நான் என் கணவரை விட்டு விலகிப் போகமாட்டேன். இது உறுதி..’’ என்றார்.
மனைவி கொடுத்த பலத்தில் கிளிண்டன் எழுந்து நின்றார். பேச்சோடு நில்லாமல், கணவரோடு தோள்கொடுத்து நின்றார். அந்த பலத்தில் கிளிண்டன் விரைவாக இயல்பு நிலைக்கு வந்து, மீண்டும் அதிகாரத்தோடு உலாவரத் தொடங்கினார். இப்போது ‘மனைவி சொல்லே மந்திரம்’ என்று அவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றுதான், இந்த தன்னம்பிக்கை ஆய்வை மேற்கொண்டுள்ளது. திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் திருமணமான இளைஞர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். பல்வேறு கட்டங்களாக, பல நாட்களாக அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ‘திருமணமாகாதவர் களைவிட திருமணமான ஆண்கள் மிகுந்த தன்னம்பிக்கையோடு வாழ்கிறார்கள். மனோபலத்துடன் இருக்கிறார்கள்’ என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
‘திருமணமானவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். அர்த்தத்தோடு பயனுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள்’ என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சமூக அந்தஸ்தும், மரியாதையும் திருமணமானவர்களுக்கு அதிகம் கிடைக்கிறது. அதுவும் அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்க ஒரு காரணமாகிறது. புதிய உறவு, நட்பு என்று அவர்களுடைய மகிழ்ச்சியான உலகம் விரிவடைந்துக் கொண்டே போகிறது.
பொறுப்புணர்வும், கடமை உணர்வும் திருமணமானவர்களிடமே அதிகம் இருக்கிறது. திருமணம் ஆண்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வை தருகிறது. கடமையை அவர்களுக்கு கற்றுத்தருகிறது. தனிமையில் இருந்து அவர்களுக்கு விடுதலை கொடுத்து, கலகலப்பான சூழலுக்கு அவர்களை கொண்டுவருகிறது.
அலுவலகத்தில் அதிக பொறுப்புடன் வேலைபார்ப்பது, வேலைகளை குறித்த நேரத்தில் முடிப்பது, நாகரிகமாக உடை அணிவது... போன்ற விஷயங்களிலும் திருமணமான ஆண்களே முன்னணியில் இருக்கிறார்கள். அதுவரை ஏனோதானோவாக நடந்துகொண்டவர்கள்கூட திருமணத்திற்கு பின்பு நேர்த்தியானவர்களாக மாறி இருக்கிறார்கள். நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருகிறார்கள் என்றெல்லாம்கூட அந்த ஆய்வு சொல்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் நடந்த ஆய்வு ஒன்றில் ‘திருமணமானவர்கள் பலவித வியாதிகளிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள்’ என்று கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது திருமணமான ஆண்கள் ஆரோக்கியமாக வாழ்கிறார்களாம்.
மனோதத்துவ நிபுணர்கள் சொல்லும் கருத்தை காண்போமா!
‘‘பெண்கள் தோல்வியை எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். திரும்பத் திரும்ப போராடி வெற்றியை கைப்பற்றும் பிடிவாதம் பெண்களுக்கு உண்டு. அந்தப் பிடிவாதமே ஆண்களை இயக்கி ஜெயிக்க வைக்கிறது. பெண்களின் போராட்ட குணம் அவர்களது பிறவி வரம்’’ என்கிறார்கள், அவர்கள்.
கணவன்–மனைவி உறவு என்பது மிக உன்னதமானது. நீண்ட தியாகங்கள், போராட்டங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு தனி மனிதருக்கும் சமூகத்தில் நம்பிக்கையான, உறுதியான பிடிமானம் தேவை. அதை திருமணம் தருகிறது.
என்ன இளைஞர்களே, திருமணத்திற்கு தயாராகிவிட்டீர்களா?!
-Vkalathur-


0 Comments