சாதி, மதம், இனம், நாடு, மொழி, பண்பாடு, அரசியல், பொருளாதாரம் ஆகிய பாகுபாடுகள் எதுவுமின்றி மனித சமூகத்தில் எவர் வேண்டுமானாலும் கலந்து கொண்டு தம் கருத்துகளை முன்வைக்க வாய்ப்புத் தரும் களமே, இணையத்தில் நிலவும் சமூக வலைத்தளம் ஆகும்.
நாட்டு எல்லைகளைக் கடந்து நண்பர்களைச் சேர்த்துக் கொள்ள முடியும். கருத்துகளை மட்டுமின்றிப் படங்கள், பாடல்கள், நிகழ்படங்கள் (வீடியோக்கள்) ஆகியவற்றையும் நண்பர்களுடன் மட்டுமின்றி உலகத்தார் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள முடியும். ஒத்த கருத்துகள் கொண்ட குழுக்களை அமைத்துக்கொள்ள முடியும். நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, எல்லைகள் கடந்து எவரையும் அழைத்து, ஓரிடத்தில் குழுமி இயக்கங்களை நடத்த உதவும்.
சமூக வலைத்தளங்களின் உதவியுடன் ஒரு நாட்டில் புரட்சியையே நிகழ்த்தி, ஆட்சி அதிகாரத்தை மாற்ற முடியும் என்பதையும் வரலாறு நிரூபித்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் முதலில் கணினியில்தான் பயன்பாட்டுக்கு வந்தன. செல்பேசியின் ஆதிக்கம் தலைதூக்கியபின், அவற்றுக்கான செல்பேசிச் செயலிகளும் அறிமுகமாயின. அனைத்துவகைச் செல்பேசிகளிலும் செயல்படக்கூடிய இத்தகைய செயலிகள் செயலிஅங்காடிகளில் இலவசமாகவே கிடைக்கின்றன.
பேஸ்புக், டுவிட்டர், கூகுள்+, லிங்க்டுஇன், டம்ப்ளர், கியூஸோன், த்சூ, வீகே, மீட்மீ ஆகியவை குறிப்பிடத்தக்க சமூக வலைத்தளங்கள் எனலாம்.
நாம் ஏற்கனவே பார்த்த தகவல்தொடர்புச் செயலிகள் சிலவும் செயலிஅங்காடிகளில் சமூகவியலின் கீழேயே வகைப்படுத்தப்பட்டுள்ளன. சமூக ஊடகம் என்றும் அழைக்கப்படுகின்ற சமூக வலைத்தளச் செயலிகள் சிலவற்றை இந்த வாரம் பார்ப்போம்.
பேஸ்புக் (Facebook) :
உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பயனர்களைக் கொண்டு முதலிடம் வகிக்கிறது. மார்ச் 2015 கணக்குப்படி 144 கோடிப் பயனர்களைக் கொண்டுள்ளது. அமெரிக்காவுக்கு (15 கோடி) அடுத்தபடியாக, இந்தியாவில் (11 கோடி) பயனர்கள் உள்ளனர். தமிழ் உள்பட ஏறத்தாழ 70 மொழிகளில் பதிப்புகளைக் கொண்டுள்ளது.
2004-ல் ஹார்வார்டு பல்கலைக்கழக மாணவர் மார்க் ஜூகர்பெர்க் அவருடன் பயின்ற சக மாணவர்களுடன் சேர்ந்து உருவாக்கியது. முதலில் ஹார்வார்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமே பயன்பட்டது. அதன்பின் பாஸ்டன் பகுதியிலுள்ள பிற கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 2006 முதல், மின்னஞ்சல் முகவரி வைத்துள்ள, 13 வயது நிரம்பிய, எவரும் பயனர் ஆகலாம் என்று வளர்ந்தது.
பயனர்களுள் பழைய, புதிய நண்பர்களைத் தேடிப்பிடித்து, அவர்களுக்கு நட்புக் கோரிக்கை அனுப்பி, உங்களுக்கு நண்பராக்கிக் கொள்ளலாம். ஒருவர் அதிக அளவாக ஐயாயிரம் நண்பர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ள முடியும். இதுதவிர எவரை வேண்டுமானாலும் பின்தொடரலாம். நண்பர்கள், பின்தொடர்வோரின் இடுகைகளை (கருத்துகள், படங்கள், நிகழ்படங்கள்) நீங்கள் பார்வையிடலாம். நண்பர்கள் மட்டுமோ, பொதுவில் அனைவருமோ காணுமாறு கருத்துகளை முன்வைக்கலாம்.
ஒருவரின் இடுகை பிடித்துள்ளது (Like) எனத் தெரிவிக்கலாம். அதுபற்றிய உங்கள் கருத்துரையை (Comment) எழுதலாம். ஒருவர் சொன்ன கருத்துரைக்குப் பதிலுரைக்கலாம். தனிப்பட்ட முறையிலும் ஒருவருக்குத் தகவல் (Message) அனுப்பலாம். ஒரு நிகழ்ச்சிக்குப் பிறரை அழைக்கலாம். கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தோரைக் கணக்கிடலாம், அடையாளம் காணலாம். காணாமல் போனோர் பேஸ்புக் மூலம் கிடைத்துள்ளனர்.
பேஸ்புக், டுவிட்டர் மூலமாகவே மக்களைத் திரட்டி அரபு நாடுகள் பலவற்றில் அரபு வசந்த (Arab Spring) எழுச்சிகள் நடந்தன. டுனீசியா, எகிப்து நாடுகளில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது வரலாறாகும்.
டுவிட்டர் (Twitter) :
ஜேக் டோர்ஸி, ஈவன் வில்லியம்ஸ், பிஸ் ஸ்டோன், நோவா கிளாஸ் ஆகியோரால், சான் பிரான்சிஸ்கோவில் 2006 -ல் உருவானது. செல்பேசி வழியாக அனுப்பப்படும் குறுஞ்செய்தி (SMS) போன்று இணையம் வழியாகக் குறுஞ்செய்தி அனுப்பும் வசதிக்காக உருவாக்கப்பட்டது. செல்பேசியின் குறுஞ்செய்தி போலவே டுவிட்டரின் சுட்டுரை (tweet) 140 எழுத்துகளுக்குள்தான் இருக்க வேண்டும். பொதுவாக, சுட்டுரைகளை அனைவரும் பார்க்கலாம். நண்பர்கள் மட்டும் பார்க்கும்படியும் தகவமைக்கலாம்.
ஒபாமா முதல் மோடி வரை அரசியல் தலைவர்கள் பலரும் டுவிட்டரில் தம் கருத்துகளை வெளியிடுகின்றனர். பில்கேட்சின் நலவாழ்வு நடவடிக்கைகள் பற்றிய சுட்டுரைகளைப் பின்தொடர்வோர் ஏராளம். மே 2015 கணக்குப்படி டுவிட்டருக்கு உலகம் முழுக்க 50 கோடிக்கு மேற்பட்ட பயனர்கள் உள்ளனர். தமிழ் உள்பட 36 மொழிகளில் செயலி கிடைக்கிறது. டுவிட்டர், இணையத்தின் எஸ்.எம்.எஸ். என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானில் 2013-ல், ஒரு வினாடியில் 1,43,199 டுவிட்டுகள் பரிமாறப்பட்டது சாதனையாகும்.
கூகுள்+ (Google+) :
2004-ல் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆர்க்குட் என்னும் சமூக வலைத்தளம். தொடக்க காலத்தில் செல்வாக்குப் பெற்று விளங்கினாலும் நாளடைவில் செல்வாக்கிழந்து 2014-ல் செயலிழந்தது. கூகுள் தன் சேவைகளின் மேலடுக்காக 2011-ல் கூகுள்+ஐ அறிமுகப்படுத்தியது. மூன்றே மாதங்களில் 5 கோடிப் பயனர்களைச் சேர்த்தது இதன் சாதனையாகும். இன்று முப்பது கோடிப் பயனர்களைக் கொண்டுள்ளது. அமெரிக்கா விலும், இந்தியாவிலும்தான் அதிகம். பிற தளங்களோடு ஒப்பிடுகையில் அன்றாடம் பயன்படுத்துவோர் குறைவே.
நண்பர்கள் என்று மட்டும் இல்லாமல் பல்வேறு வகையான உறவு வட்டங்களை (Circles) உருவாக்கிக் கொள்ள முடியும். ஒரு வட்டத்தின் உறுப்பினர்கள் தமக்குள் மட்டுமின்றி வெளியாருடனும் கருத்துகள், படங்கள், நிகழ்படங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஜீ மெயில் பயனர்கள் எவரும் கூகுள்+ வட்டங்களில் இணையலாம். கூகுள்+ பேஜஸ், கூகுள்+ பேட்ஜஸ், கூகுள்+ கம்யூனிட்டீஸ், கூகுள்+ கலெக்ஷன்ஸ், கூகுள்+ வியூஸ், கூகுள்+ ஈவன்ட்ஸ் ஆகிய கூடுதல் சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
லிங்க்டுஇன் (LinkedIn) :
தொழில், வணிகம் இவற்றை மையப்படுத்திய சமூக வலைத்தளம் இது. ரெய்டு ஹாப்மேன் வேறு ஐந்து பேருடன் சேர்ந்து 2003-ல் அறிமுகப்படுத்தினார். இதன் செல்பேசிச் செயலி 2008-ல் வெளியிடப்பட்டது. மார்ச் 2015 கணக்குப்படி 200 நாடுகளில் 36 கோடிக்கு மேல் பயனர்கள் உள்ளனர். அமெரிக்காவுக்கு (9.3 கோடி) அடுத்தபடியாக இந்தியாவில் 2.4 கோடிப் பேர் உள்ளனர். 24 மொழிகளில் கிடைக்கிறது. தமிழில் இல்லை.
இதில் பயனர்கள் பிறருடன் தொடர்புகளை (Connections) ஏற்படுத்திக் கொள்ளலாம். இத்தொடர்புகளைப் பலவகையிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். வேலை தேடுவோர் தம் தகுதிக் குறிப்புகளை வெளியிடலாம். தம் தகுதிக்குறிப்புகளை யாரெல்லாம் பார்த்துள்ளனர் என அறியலாம். பல நிறுவனங்களைப் பின்தொடரலாம்.
அவற்றிலுள்ள வேலைவாய்ப்புத் தகவல்களைப் பெற்று, சிறந்த வேலை தேடிக் கொள்ளலாம். வணிக வாய்ப்புகளைப் பெறலாம். தொழில் நடத்துவோர் வேலைக்குத் தகுதியுடைய ஆட்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பயனர்கள் தமக்குள்ளே குழுக்களை அமைத்துக்கொள்ளும் வசதியும் உண்டு. ஏறத்தாழ 12 லட்சத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன.
மை ஸ்பேஸ் (Myspace) :
2005 முதல் 2008 வரை உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பயனர்களைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. 2006-ல் அமெரிக்காவில் கூகுளையும் முந்தியது. கிரிஷ் டிஉல்பே, டாம் ஆண்டர்சன் ஆகியோர் 2003-ல் இதைத் தொடங்கினர். நண்பர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். குழுக்களை உருவாக்கிக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளலாம். 2005-ல் டிஉல்பே, ஜூகர்பெர்க்கைச் சந்தித்து பேஸ்புக்கை வாங்கிக்கொள்ளக் கேட்டார். ஜூகர்பெர்க் ஏழரைக் கோடி டாலர் கேட்க, டிஉல்பே அவ்வளவு தொகை தரத் தயாராக இல்லாததால் பேச்சுவார்த்தை முறிந்தது.
ஆனால், பேஸ்புக் எதிர்பாராத வெற்றியைப் பெற்று 2008-ல் மைஸ்பேஸைப் பின்னுக்குத் தள்ளியது. அதன்பின் மைஸ்பேஸ் தொடர்ந்து சரிவைக் கண்டது. புதுப்பிக்கப்பட்ட பதிப்பு 2013-ல் வெளியிடப்பட்டது. செல்பேசிச் செயலியும் புதுப்பிக்கப்பட்டது. மின்னஞ்சல், பேஸ்புக் அல்லது டுவிட்டர் கணக்கு மூலம் பயனராகப் பதிவு செய்து கொள்ளலாம்.
யாகூவுக்குச் சொந்தமான டம்ப்ளர் (Tum-b-lr) டேவிட் கார்ப் உருவாக்கியது. இப்போது 24 கோடி வலைப்பூக்களை உள்ளடக்கியதாகவும், நாளன்றுக்கு எட்டுக் கோடிப் பதிவுகள் இடப்படுவதாகவும், இதுவரை பத்தாயிரம் கோடிப் பதிவுகள் இடப்பட்டுள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
கியூஸோன் (Qzone) 63 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு இரண்டாம் இடம் வகித்தாலும், சீனாவில் மட்டுமே செல்வாக்குப் பெற்றுள்ளது.
த்சூ (Tsu) பேஸ்புக்குக்குப் போட்டியாக அதைப் போன்றே அமைந்துள்ளது. உங்கள் படைப்புகளை அதிகப்படியானோர் பார்வையிட்டால் அதன்மூலம் உங்களுக்கு வருவாய் கிடைக்கும்.
வீகே (VK) ரஷ்யாவிலும், ரஷ்ய மொழி பேசுவோரிடமும் செல்வாக்குப் பெற்று விளங்குகிறது.
மீட் மீ (Meet Me) இரண்டு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் உருவாக்கியது. மை இயர்புக் எனத் தொடங்கப்பட்டுப் பின்னாளில் பெயர் மாற்றம் பெற்றது.


0 Comments