ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை மீண்டும் கொண்டுவரும் நோக்கத்திலும் ரணிலை காப்பாற்றும் நோக்கத்திலுமே ஜனாதிபதி செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் கரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிக்கையினால் மனமுடைந்த பல்லாயிரக் கணக்கான நபர்களில் நானும் ஒருவன்.
அவர் குறிப்பிட்ட வார்த்தைகள் மிகவும் வேதனைக்குரியவையாகும். எமது கட்சிக்குள் சதி செய்து யாரையும் வீழ்த்த வேண்டிய அவசியம் எமக்கு எப்போதும் இருந்ததில்லை.
ஆனால் பாராளுமன்றத்தில் மஹிந்த மற்றும் அவரது அணியினால் குழப்பங்கள் நடக்கவிருந்ததன் காரணத்தினால் தான் பாராளுமன்றத்தை கலைத்ததாக தெரிவித்துள்ளார். இந்த கருத்தானது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விழுந்த பாரிய அடியாகும்.
அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை காப்பாற்றவே பாராளுமன்றத்தை கலைத்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் உருவாக்கப்பட்ட அதிகாரம் பொருந்திய பாராளுமன்றமே நடைமுறையில் இருந்தது.
இந்த பாராளுமன்றத்தை கலைத்து பிரதமரை காப்பாற்ற முடிவெடுத்துள்ளமை மோசமானதொரு செயற்பாடாகும். இந்த விடயம் தொடர்பில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நாம் கேள்வி எழுப்புவோம்.
அதேபோல் உலகில் எங்கும் இல்லாத ஒரு சம்பவம் இலங்கையில் நடைபெற்றுள்ளது. எதிரணித் தலைவரை காப்பாற்ற ஜனாதிபதி முயற்சிகளை எடுத்துள்ளார் என்பதை கேட்கும் போது தாங்கிக்கொள்ள முடியாதுள்ளது. இவ்வாறானதொரு சம்பவத்தை நான் வேறு எந்தவொரு நாட்டிலும் கேட்டதில்லை.
சிலவேளை ஜனாதிபதி ஏதேனும் காரணத்தை கருத்தில்கொண்டு இவ்வாறு தெரிவித்தாரோ தெரியவில்லை. ஆனால் இவரது கருத்து ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்க எடுத்த நடவடிக்கையா என்று அனைவர் மத்தியில் இருக்கும் சந்தேகத்தைப் போல் எம்மிடமும் அந்த சந்தேகம் எழுந்துள்ளது.
அதற்கான தெளிவை நாம் மத்திய குழுக் கூட்டத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என நினைக்கின்றேன்.


0 Comments