இலங்கை அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி 2-1 என தொடரைக் கைப்பற்றியது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பல்லேகலயில் இடம்பெற்றது.
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 278 ஓட்டங்களையும் பாகிஸ்தான் 215 ஓட்டங்களையும் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தன.
63 ஓட்டங்கள் முன்னிலையுடன் இலங்கை அணி தனது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. இலங்கை அணித் தலைவர் மெத்தியூஸின் சிறப்பான சதத்தால் இலங்கை அணி 313 ஓட்டங்களைக் குவித்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 377 ஓட்டங்களை நிர்ணயித்தது இலங்கை. இதில் அஞ்சலோ மெத்தியூஸ் 122 ஓட்டங்களை விளாசினார்.
377 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர் அஹ்மது ஷேசாத் ஓட்டமேதும் பெறாத நிலை யில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நின்ற அசார் அலி 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசாத் கைப்பற்றினார்.
3ஆவது விக்கெட்டுக்கு ஷான் மசூத் உடன் மூத்த வீரர் யூனிஸ்கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 4ஆவது நாள் மதிய தேநீர் இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்களை எடுத்தது.
அதன்பிறகு ஓட்ட வேகத்தை அதிகரித்த இந்த ஜோடி இணைப்பாட்டமாக 217 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதனால் அணியின் ஓட்ட எண்ணிக்கை 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 230 ஓட்டங்களானது.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் இதில் யூனிஸ் கான் 101 ஓட்டங்களுடனும், ஷான் மசூத் 114 ஓட்டங்களுடனும் களத்தில் நின்றனர். ஐந்தாவதும் இறுதியுமான நாளான இன்று பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 147 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
இந்நிலையில் 8 விக்கெட்டுகள் கைவசமிருக்க தனது ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றியது. யுனிஸ்கான் ஆட்டமிழப்பின்றி 171 ஓட்டங்களையும் மிஸ்பா உல்ஹக் 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
சிறப்பாக விளையாடிய ஷான் மசூத் 125 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இத் தொடரின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் யஷீர் ஷாவும் இப் போட்டியின் ஆட்டநாயகனாக யுனிஸ்கானும் தெரிவுசெய்யப்பட்டனர்.


0 Comments