Subscribe Us

header ads

முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் 25 MPகளை பெறலாம்!! எப்படி என்கிறீர்களா?

சகோதர இன மக்களுடனான அரசியல் உறவை வலுப்படுத்தி குறைந்தது 25 முஸ்லிம் பிரதிநிதிகளையேனும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வென்றெடுப்போம் என அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் தெரிவித்தது.


பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2015 தொடர்பில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தேசிய தலைவர் எம்.ஐ. உதுமாலெப்பை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.



குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பாராளுமன்றம் நாட்டின் அனைத்து இன, மத மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிஉயர் மக்களவையாகும். மக்கள் பிரதிநிதித்துவம், சட்டவாக்கம், பொது நிதியைக் கட்டுப்படுத்தல், அரச முன்னெடுப்புக்களை மேற்பார்வை செய்தல் மற்றும் நீதி விசாரணை எனும் பாரிய பொறுப்புக்களையுடைய பாராளுமன்றத்துக்கு முஸ்லிம்கள் சார்பாக, சமூக உணர்வுடன், சக இன மக்களுடனும் நல்லுறவைப் பேணி, இராஜதந்திர முறையில் முழு மூச்சுடன் பணிபுரியக்கூடிய தகுதியான மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்ய நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் கடந்த நிலையில் மீள் குடியேற்றப்படாத வடபுல மக்களின் நில உரிமை இன்று திட்டமிடப்பட்ட வகையில் பறிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் சமய, கலாசார உரிமைகள் மற்றும் முஸ்லிம் தனியார் சட்டங்கள் இலக்குவைக்கப்பட்டுள்ளன. தேர்தல் சீர்திருத்தம் மூலம் முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 50% ஆல் குறைவடையும் அபாயம் உள்ளது. அரச சேவையில் சுமார் 2%முஸ்லிம்களே உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இது போன்ற பாரிய பிரச்சினைகள் தீர்க்கப்படுவதுடன், முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார, சமூக அபிவிருத்தியுடன் இனங்களுக்கிடையிலான நல்லுறவும் வளர்க்கப்பட வேண்டியுள்ளது. எனவே எங்களது வாக்கு வெறுமனே தனிநபர் விருப்பாக அன்றி சமூகத்தின் குரலாக அமைய வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் கட்சி பேதம் மறந்து “இலங்கை வாழ் முஸ்லிம்களின் இருப்பை உறுதிசெய்ய” அனைவரும் ஒன்றிணைந்தோம்.

அதில் வெற்றியடைந்தோம். அல்ஹம்துலில்லாஹ்! அதேபோல இந்தத் தேர்தலிலும் பொது உடன்பாட்டின் அடிப்படையில் எம் முன் உள்ள சவால்களை எதிர்கொள்ள அனைத்து முஸ்லிம்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். சகோதர இன மக்களுடனான உறவை வலுப்படுத்துவதுடன், பாராளுமன்றத்தில் 25 ஐ விட குறையாத முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் நாம் உறுதிசெய்ய வேண்டும். அதேவேளை கடந்த காலங்களில் இனவாத சக்திகளுக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு சார்பாக அல்லது நியாயத்தின் பக்கம் குரல் கொடுத்த சிங்கள அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கு நன்றிக்கடன் செலுத்தவும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களிளும் 12 மாவட்டங்களிலிருந்தே முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியுமாக உள்ளதுடன், ஏனைய 10 மாவட்டங்களிலிருந்தும் முஸ்லிம் ஒருவர் வெற்றிபெறுவது கடினமான ஒரு விடயமாகும். 


மாத்தளை (35,000), நுவரெலியா (16,000), காலி (30,000), மாத்தறை (20,000), ஹம்பாந்தோட்டை (11,500), யாழ்ப்பாணம் (2,000), பொலன்னறுவை (23,000), மொனராகலை (7,500), பதுளை (36,000) மற்றும் இரத்தினபுரி (19,000) ஆகிய 10 மாவட்டங்களிலும் ஒப்பீட்டு ரீதியில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையால் அவர்கள் தமது பிரதேசத்தில் இனவாதத்துக்குத் துணை போகாது, நடுநிலைமையாக அனைத்து இன மக்களுக்கும் சேவை செய்யக் கூடிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்களையும், நீதிக்கும், நியாயத்துக்கும் குரல் கொடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகளுக்கும் தமது ஆதரவை வழங்கி பிரதேசத்தின் ஒற்றுமை மற்றும் சகவாழ்வை ஊக்குவிக்கும் ஒரு களமாக தேர்தல் களத்தைப் பயன்படுத்த முடியும்.


சிறுபான்மை மக்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெறும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலான இறுதித் தேர்தலாக இது அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே சந்தர்ப்பத்தை தவறவிட்டு பிறகு கைசேதப்படாமல் பின்வரும் 12 மாவட்டங்களிலிருந்தும் கூடியளவு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற திட்டமிட்ட வகையில் நாம் செயற்பட வேண்டும்.

2001 மற்றும் 2004 பாராளுமன்றங்களில் முஸ்லிம் பிரதிநித்துவம் 25 மற்றும் 24 ஆக இருந்தாலும், 2010 இல் அது 18 ஆகக் குறைவடைந்தது. அட்டவணையின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்ய மாவட்ட உலமாக்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது.

MUSLIMS

இது விதைப்புப் பருவம். இந்த பருவத்தில் நீதிக்கும், நியாயத்துக்கும் குரல் கொடுக்கக் கூடியதும், ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்படக் கூடியதுமான முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத மக்கள் பிரதிநிதிகளுடனான நல்லுறவை வளர்த்து அவர்கள் மூலம் சமூகத்துக்குச் சேவை செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த நிலையில், அரசியல் ஒரு சாக்கடை என ஒதுங்கி இருந்துவிட்டு தேவைகளுக்கு மட்டும் அவர்களை அணுகுவது அல்லது அறிக்கைகளை விடுத்து சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகான முயற்சிப்பது ஒரு ஆக்கபூர்வமான விடயமல்ல. எனவே நாம் அனைவரும் எமது உரிமைகளை வென்றெடுப்பதில் பார்வையாளர்களாகவன்றி, பங்காளாகளாக இருப்பதன் மூலம், எமது இலக்கை அடைய முடியுமாக இருக்கும்.

இறுதியாக, கள நிலமைக்கு அமைய ஒரு கட்சியை அல்லது சில கட்சிகளையும், வேட்பாளர்களையும் பொது உடன்பாட்டின் அடிப்படையில் தெரிவுசெய்து, மாவட்டத்தின் ஒரு முஸ்லிம் வாக்குக் கூட வீணடிக்கப்படாது அதி கூடிய முஸ்லிம் பிரதிநிதித்துவம் பெறப்பட வேண்டும். ஏனைய சிறுபான்மை மாவட்டங்களில் இன ஒற்றுமையை மையப்படுத்தி எமது வாக்குகள் பிரயோகிக்கப்பட வேண்டும்.


தேசிய ஒற்றுமை, ஜனநாயக உரிமை, சமத்துவமான அபிவிருத்தி மற்றும் அனைவரையும் உள்வாங்கிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்து, இனவாதம், அராஜகம், ஊழல், மோசடி, வன்முறை, மற்றும் அநியாயத்துக்கு எதிரானதாகவும் வாக்களித்து நாட்டின் அபிவிருத்தி மற்றும் இன ஒருமைப்பாட்டு முயற்சியில் நாமும் பங்களியாய் இருப்போம். வன்முறையற்ற அரசியல் களத்தில் முஸ்லிம்களுக்கு சாதகமான பெறுபெறுகள் கிடைக்கப்பெற எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக” என்றார்.-Srilanka Muslims-

Post a Comment

0 Comments