‘‘அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம். தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம். இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம். பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்’’ என்று எம்.ஜி.ஆர். பாடுவது போல் ஒரு திரைப்படத்தில் பாடல் காட்சி இடம் பெற்றிருக்கும்.
அன்புக்கு அன்னை, அறிவுக்கு தந்தை என்பதை இந்த பாடல் வரிகள் மூலம் கவிஞர் கண்ணதாசன் சுட்டிக்காட்டியிருப்பார்.
ஒரு குடும்பத்தில், குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணும் பொறுப்பு எப்படி தாய்க்கு இருக்கிறதோ, அதேபோல் அந்த குழந்தைகளின் முன்னேற்றத்தில் தந்தையின் பங்களிப்பு முக்கியமாக இருக்கிறது.
இருந்தாலும், குடும்பத்திற்காக மாடாய் உழைத்து, ஓடாய் தேயும் தந்தையைவிட, அன்பை பொழியும் தாயைத்தான் பெரும்பாலான பிள்ளைகளுக்கு அதிகம் பிடிக்கிறது.
உலகம் முழுவதும் ‘அன்னையர் தினம்’ என்பது காலம் தொட்டே கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், ‘தந்தையர் தினம்’ என்பது 1910–ம் ஆண்டில் இருந்து தான் கொண்டாடப்படுகிறது.
அதற்கு காரணமாக விளங்கியவர் அமெரிக்காவை சேர்ந்த சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டோட் என்ற பெண் ஆவார்.
அவரது தாயாரின் மறைவுக்கு பிறகு, அந்த குடும்பத்தில் இருந்த 6 பிள்ளைகளையும் தந்தை வில்லியம்ஸ் தான் கடும் சிரமத்திற்கு மத்தியில் வளர்த்தார். தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் இருந்து கடமையை நிறைவேற்றிய தனது தந்தையை கவுரவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.
அதன் அடிப்படையில், அன்னையர் தினத்தைப்போல் தந்தையர் தினத்தையும் கொண்டாட வேண்டும் என்று அவர் பிரசாரம் செய்தார். அவரது கோரிக்கையை, அப்போதைய ஸ்போக்கேன் நகர கவர்னர் அங்கீகரித்தார். அதன்பின்னர் தான், தந்தையர் தினமும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று உலகம் முழுவதும் 52 நாடுகளில் ஜூன் மாதம் 3–வது ஞாயிற்றுக்கிழமை ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்படுகிறது. வேறு பல நாடுகளில், பிற நாட்களில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தமட்டில், ஜூன் மாதம் 3–வது ஞாயிற்றுக்கிழமையே (இன்று) ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்படுகிறது.
கனிவான கண்டிப்பையும், மறைமுகமான பாசத்தையும் வெளிப்படுத்தும் தங்களது தந்தையை கவுரவித்து பரிசுகளை வழங்க, தமிழகத்தில் உள்ளவர்கள் தயாராகி வருகின்றனர்.
சென்னையில் உள்ள வாழ்த்து அட்டை கடைகளில், தந்தையர் தினத்திற்கு என்றே பிரத்யேக வாழ்த்து அட்டைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக, தந்தைக்கு வாழ்த்து மடல் போன்று வித்தியாசமாக விற்பனைக்கு வந்துள்ளது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
இதேபோல், சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் தந்தையர் தினத்தை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை தியாகராயநகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில், தங்களது தந்தைக்கு பிடித்த உணவை கூறினால், தயாரித்து தருவதாக தெரிவித்துள்ளனர்.
இன்றைய பரபரப்பான உலகில், குடும்பத்தின் வளர்ச்சிக்காக உழைக்க ஓடிக்கொண்டிருக்கும் தந்தைமார்களில் எத்தனையோ பேர், குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் உழைத்து கொண்டிருக்கின்றனர். சென்னையை போன்ற பெரு நகரங்களில் குடும்பத்துடன் இருந்தாலும், காலையில் குழந்தை கண்விழிக்கும் போது வீட்டை விட்டு வேலைக்கு புறப்படும் தந்தைமார்கள், இரவு குழந்தை தூங்கும் நேரத்தில் தான் வீடு திரும்புகிறார்கள். அந்த அளவுக்கு குழந்தைகள் உடனான உறவை வேலைப்பளு பிரிக்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் தனது சிறு வயது குழந்தைகளுக்கு பொம்மை வாங்கிக்கொடுத்து விளையாடச் சொல்லிவிட்டு பல தந்தைமார்கள் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால், அந்த குழந்தையோ, பொம்மைக்கு பதிலாக தனது தந்தையே, அருகில் இருந்து விளையாட மாட்டாரா? என்று ஏங்குகிறார்கள். பொருளாதார தேவை அந்த அளவுக்கு குடும்ப சூழ்நிலையை மாற்றிவிடுகிறது. இருந்தாலும், தந்தை மீதான பாசம் அந்த குழந்தைகளுக்கு குறைந்து போய்விடுவதில்லை.
சிறு வயதில், தாய்–தந்தையின் கை விரலைப்பிடித்து தத்தித் தத்தி நடக்க பழகும் குழந்தைகள், தங்களது பெற்றோரின் முதுமை காலத்தில், அவர்களின் நடை தளரும்போது, கையை பிடித்து நடக்க உதவுவதுதான், தாய்–தந்தைக்கு அவர்கள் ஆற்றும் கடமையாக இருக்க முடியும். அதற்கான உறுதியை இன்றைய தந்தையர் தினத்தில் அனைவரும் ஏற்போம்.
0 Comments