கல்லூரியில் கல்விக்கட்டணம் செலுத்துவதற்காக 21 வயதான பாலிடெக்னிக் மாணவன் ஒருவன் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது உத்திரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று டெல்லி-பவுரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றை, கல்லூரியில் பாலிடெக்னிக் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் நிதின் குமார்(21), தனது நண்பர் மனோஜுடன் காரில் சென்று வழிமறித்தார். இருவரும் சேர்ந்து லாரியின் டிரைவரை அடித்து கீழே தள்ளி விட்டு லாரியை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக ஓட்டி சென்றனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் பற்றிய தகவல் அறிந்த போலீசார் உடனடியாக தங்கள் ஜீப்பில் விரட்டிச் சென்று லாரியை மடக்கினர். மனோஜ் சம்பவ இடத்திலிருந்து தப்பியோட, லாரியை ஓட்டி வந்த நிதினை போலீசார் மடக்கிப்பிடித்தனர். விசாரணையின் போது தன்னைப் பற்றிய தகவல்களைக் கூறிய நிதின், கல்லூரியில் 35 ஆயிரம் ரூபாய் கல்விக்கட்டணம் செலுத்துவதற்காகவே இந்தக் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நிதினிடம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ள போலீசார், தப்பி ஓடிய மனோஜை தேடி வருகின்றனர்.
0 Comments