மனித உயிருக்கு உத்திரவாதமில்லை. நேற்று இருந்தவர் இன்றில்லை. “10 நிமிடங்களுக்கு முன் நன்றாக பேசிக்கொண்டிருந்தவர், திடீரென போய் விட்டாரே. நேற்று நன்றாக நடமாடிக் கொண்டிருந்தவர் இன்று பக்கவாதம் தாக்கி முடமாகி விட்டாரே’ என்று பலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் என்ன? இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புதான்.
இதயத்திற்குச் செல்லும் இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது மாரடைப்பாக உருமாறி உயிரை மாய்க்கிறது. மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது பக்கவாதமாகப் பரிணாமம் எடுத்து மனிதனை முடக்கி விடுகிறது.
துடிக்கும் மனித இதயம், மனிதனுக்கும் வாழ்வை வழங்குகிறது. மனிதன் வாழ வேண்டுமானால் அவனது இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடித்தே ஆக வேண்டும். இவ்வாறு துடித்துத் துடித்து மனிதனுக்கு வாழ்வை வழங்கும் இதயம் துடிப்பதற்கு சக்தி தேவை. அந்தச் சக்தி இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்கள் மூலம்தான் இதயத்திற்கு கிடைக்கிறது. இந்த இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது இதயத்திற்குச் செல்லும் இரத்தவோட்டம் தடைப்படுகிறது. இதனால், நெஞ்சுவலி, மாரடைப்பு ஏற்படுகிறது.
இதேபோல் மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது பக்கவாதமாக உருமாறி மனித வாழ்வைச் சீர்குலைக்கிறது.
இதயத்திற்கும் மூளைக்கும் இரத்தம் மற்றும் தேவையான சத்துக்களைக் கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் இதயத்தைப் போலவே சுருங்கி விரியும் தன்மை உடையன. அதனால்தான் அவற்றில் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது.
இரத்தக் குழாய்கள் சுருங்கி விரிய “நைட்ரிக் ஒட்சைட்’ என்ற இரசாயனப் பொருள் உதவுகிறது. இது நமது உடலிலேயே உற்பத்தி ஆகும் பொருள். இதுதான் இரத்தக் குழாய்களுக்குள் செ ன்று அவற்றைச் சுருங்கி விரிய உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் காரணமாகவும், குருதியில் கொழுப்புச் சத்து மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது “நைட்ரிக் ஒட்சைட்’ சுரப்பது குறைகிறது. மேலும் மன இறுக்கமும், மனக்கவலையும் கூட நைட்ரிக் ஒட்சைட் சுரப்பதைக் கெடுக்கிறது. புகை பிடித்தல், மது அருந்துதல், அசைவ உணவுகளை அதிகளவு உட்கொள்ளுதல் போன்ற பழக்கங்கள் கூட இந்த நைட்ரிக் ஒட்சைட் சுரப்பதைக் குறைக்கிறது.
நைட்ரிக் ஒட்சைட் உற்பத்தி குறையும்போது இரத்தக் குழாய் சுருங்கி விரிவது குறையும். அப்பொழுது இரத்தக் குழாய்களில் கொழுப்பு படியத் தொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது.
இரத்தக்குழாய் அடைப்புகள் வராமல் தடுப்பது எப்படி?
இரத்த அழுத்தத்திற்குச் சரியான மருந்துகளை உட்கொண்டு அவற்றைச் சீராக வையுங்கள். நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். கொழுப்புள்ள பொருட்களான நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய், முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி இவற்றைத் தவிர்த்திடுங்கள். சிகரெட்டைத் தூக்கி எறியுங்கள். மதுப் பழக்கத்தில் இருந்து வெளிவாருங்கள். எண்ணெய்யில் பொரித்த உணவுகளையும், நெய்யால் செய்த பண்டங்களையும் குறையுங்கள். உப்பை அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். இனிப்பான பழங்கள், கிழங்குகள், பழச்சாறுகள் இவற்றை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக் கூடாது.
இவை தவிர, மிக முக்கியமாக உடற்பயிற்சி செய்யுங்கள். நாள்தோறும் காலை, மாலை அரை மணி நேரம் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். உணவு வகைகள் அதிகம் உட்கொள்வதைக் குறையுங்கள். உங்கள் இதயம் பாதுகாப்பாக இருக்கும்.


0 Comments