‘வாழையடி வாழையாக’ வாழும்படி வாழ்த்துகிறோம். வாழையின் அடி முதல் நுனி வரை அனைத்துமே நமக்குப் பயன்படுவதை அறிவோம். வாழையின் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. வாழை பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பை கி.மு. 600 ஆண்டு புத்த மத ஏடுகளில் காணலாம். மாமன்னர் அலெக்சாண்டர் கி.மு. 327இல் இந்தியாவில் வாழைப்பழத்தை சுவைத்ததற்கான குறிப்புகள் உள்ளன.
‘‘வாழையை ஏழைகளின் 'ஊட்டச்சத்து' உணவு என்றே சொல்லலாம். வளர்ந்து வரும் நாடுகளில் அநேக மக்களின் பிரதான உணவுகளில் வாழைக்கே முன்னுரிமை உண்டு. உருளைக்கிழங்கை சமைக்கிற அதே முறைகளில் வாழைக்காயையும் சமைக்கலாம். பொரிக்கலாம். வேக வைக்கலாம். வறுக்கலாம்...’’ ஊட்டச்சத்து நிபுணர்கள் வாழையின் மகத்துவங்களையும் மருத்துவ குணங்களையும் பற்றி இப்படிக் குறிப்பிடுகின்றனர்
‘‘90 நிமிட உடற்பயிற்சிக்குப் பிறகு தேவைப்படுகிற சக்தியை 2 வாழைப்பழங்களின் மூலம் பெற்றுவிட முடியும். உலக அளவில் விளையாட்டு வீரர்களின் விருப்பமான பழங்களில் வாழைப்பழத்துக்கே முதலிடம் என்பதில் சந்தேகமில்லை. உடனடி சக்தியை கொடுக்க மட்டுமின்றி, இன்னும் ஏராளமான உடல்நலக் கோளாறுகளை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி வாழைக்கு உண்டு.
மன அழுத்தம்
கடுமையான மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு வாழைப்பழம் சாப்பிட்டதும் அதிலிருந்து நிவாரணம் கிடைப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காரணம், அதிலுள்ள ட்ரிப்டோஃபன். இது ஒருவகையான புரதம். இதை உடல் செரட்டோனினாக மாற்றும். செரட்டோனின் படபடப்பைக் குறைத்து, மகிழ்ச்சியான உணர்வைக் கொடுக்கக்கூடியது.
பி.எம்.எஸ்.
மாதவிலக்குக்கு முன்னால் மனத்தளவிலும் உடலளவிலும் ஏற்படுகிற பிரச்னைகளை ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம் (பி.எம்.எஸ்.) என்கிறோம். அந்தப் பிரச்னைகளுக்கு மாத்திரைகள் எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக வாழைப்பழம் சரியான மாற்று மருந்து.
இரத்த சோகை
வாழைப் பழத்தில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து இரத்தசோகையை விரட்டக் கூடியது.
இரத்த அழுத்தம்
உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கக் கூடியது. வாதத்தையும் வரவிடாமல் செய்யக்கூடியதாம்.
மலச்சிக்கல்
இதிலுள்ள நார்ச்சத்தானது செரிமானத்துக்கு உதவும் என்பது எல்லோரும் அறிந்ததே. மலமிளக்கும் மருந்துகளின் தேவையின்றி, மலச்சிக்கலைப் போக்கக்கூடியது.
நெஞ்செரிச்சல்
நெஞ்செரிச்சலால் அவதிப்படுவோர் அதற்கான மருந்துகளைத் தேடி ஓடாமல், உடனடியாக வாழைப்பழம் சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.
கொசுக்கடி
கொசுக்கடியின் அவதியிலிருந்து விடுபட, கனிந்த வாழைப்பழத்தைத் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
மசக்கை
கர்ப்ப கால மசக்கைக்கும் வாழை நல்ல மருந்து.
அல்சர்
வாழையின் மென்மையான, வழுவழுப்பான தன்மை காரணமாக, அது குடல் பிரச்னைகளுக்கும் மருந்தாவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதிகமாக அமிலம் சுரப்பதைக் கட்டுப்படுத்தி, வயிற்றுப் பகுதிக்கு இதமளிக்கக்கூடியதும் கூட.இங்கிலாந்தில் 200 மாணவர்களுக்கு காலை, முன்பகல், மதியம் என மூன்று வேளைகளுக்கும் வாழைப்பழம் கொடுக்கப்பட்டதாம். அவர்கள் மற்றவர்களைவிட சிறப்பாக பரீட்சை எழுதியது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. வாழையில் உள்ள பொட்டாசியத்துக்கு, மூளையின் ஆற்றலைத் தூண்டி, நினைவாற்றலைப் பெருக்கும் சக்தி உள்ளதே காரணமாம்.
மது அருந்திய பிறகு தொடரும் ஹேங் ஓவர் மனநிலைக்கு வாழை சிறந்த உணவு என்கிறார்கள் மருத்துவர்கள். வாழைப்பழத்தில் பாலும் தேனும் சேர்த்து மில்க் ஷேக்காக குடிப்பது இந்தப் பிரச்சினைக்கு நல்லது என்கிறார்கள்.
இவை தவிர, வாழையில் உள்ள அதிகளவு விட்டமின் பி, நரம்பு மண்டல ஆரோக்கியத்துக்கு நல்லது. கர்ப்பிணிகளின் உடல் சூட்டை சமப்படுத்ததுகிறது, குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கச் செய்யவும் வாழை உதவுகிறது. வாழையில் உள்ள விட்டமின் பி 6 மற்றும் பி12, மக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை சிகரெட் பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது.
யாருக்குக் கூடாது?
கட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பவர்கள் வாழைக்காய், வாழைப்பழத்தைத் தொடவே கூடாது. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் அளவோடு எடுத்துக் கொள்வதில் ஆபத்தில்லை.
ஆப்பிளைவிடச் சிறந்தது!
ஆப்பிளைவிட 4 மடங்கு அதிக புரதம், 2 மடங்கு கார்போஹைதரேட், 3 மடங்கு அதிக பொஸ்பரஸ், 5 மடங்கு அதிகமான விட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து, 2 மடங்கு அதிகமான விட்டமின் மற்றும் தாதுச்சத்துகளைக் கொண்டது வாழைப்பழம்.


0 Comments