அம்பாறை, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக வைத்திய அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டதை ஆட்சேபனை செய்து இன்று சம்மாந்துறை வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
சம்மாந்துறை வைத்தியசாலையில் தற்போது வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வரும் டாக்டர் அப்துல் அஸீஸ் கடமையில் இருக்கத்தக்கதாக அம்பாறை வைத்தியசாலையில் இருந்து புதிதாக ஒரு வைத்திய அதிகாரியை நியமிக்க அங்குள்ள அரசியல்வாதி ஒருவர் திரைமறைவில் மேற்கொண்ட சம்பவத்தினைக் கண்டித்து இவ் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று காலை வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று கூடிய உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையை அரசியலாக்காதே! வைத்தியர்களை அரசியல் பொம்மையாக்காதே! போதும் போதும் செய்தது போதும்! ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்! போன்ற பல வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஏந்திய வண்ணம் இவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதனால் இன்று அவ் வைத்தியசாலையில் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டன.


0 Comments