சூரிய ஒளியின் மூலம் உலகை வலம் வரும் சோலார் இம்பல்ஸ் விமானம், ஒரு மாத கால தாமதத்துக்கு பின், இன்று தனது சவாலான பயணத்தை மேற்கொண்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் இருந்து, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில், பசிபிக் பெருங்கடல் நாடான ஹவாய் தீவுக்கு 'சோலார் இம்பல்ஸ்-2' விமானம் புறப்பட்டு சென்றது. இந்த சவாலான பயணத்தில் சோலார் இம்பல்ஸ் விமானம் 5 பகல் 5 இரவு இடைவிடாமல் வானில் பறந்து 7900 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். வானிலையை கூர்ந்து கவனித்த பின்பே விமானத்தின் பயணம் துவங்கப்பட்டுள்ளதாக இவ்விமான பயண திட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான பெட்ராண்ட் பிக்கார்ட் கூறியுள்ளார்.
விமானத்தின் போக்கு, பறக்கும் உயரம், பயணிக்கும் நேரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளதாக கூறியுள்ள பிக்கார்ட், 3வது நாள் பயணத்தின் போது மேகக்கூடத்தின் ஊடாக பயணிக்கும் விமானம், பின்னர் 5வது நாளிலும் மேகக்கூட்டத்தின் ஊடாக பயணித்து இலக்கை அடையும் என கூறியுள்ளார். இதில் ஏதாவது குறை ஏற்பட்டாலும், விமானத்தை எங்கும் தரையிறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இச்சவாலான பயணத்தை மேற்கொண்டுள்ள விமானி போர்ச்பெர்க்(62 வயது), ஆபத்து ஏற்பட்டால் பாராசூட் மற்றும் லைப் ராப்ட் மூலம் குதிக்க வழி செய்துள்ளதாகவும் பிக்கார்ட் கூறினார். லைப் ராப்ட்டை பயன்படுத்தி கடலில் மிதக்கும் போர்ச்பெர்க் மூன்று நாட்களுக்குள் கப்பல் மூலம் மீட்கப்படுவார் என்றும் பிக்கார்ட் கூறியுள்ளார்.



0 Comments