பவானிசாகர் அருகே உள்ள காராச்சிக்கொரையை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 40). விவசாயி. கிராமத்தில் இவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது. கிணற்றுப்பாசனம் மூலம் விவசாயம் செய்து வந்த நந்தகுமாருக்கு மின்தடை காரணமாக பயிர்களுக்கு உரிய நேரத்தில் நீர் பாய்ச்சமுடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் வேளாண் பொறியியல் துறை சார்பில் தமிழக அரசின் இலவச சூரியசக்தி மின்மோட்டார் திட்டம் குறித்து தகவலறிந்த நந்தகுமார் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தார். இதற்கு விவசாயியின் பங்குத்தொகையான ரூ.1.20 லட்சம் பணத்தை செலுத்தினார்.
இதையடுத்து முன்னுரிமை அடிப்படையில் இவருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள சூரியசக்தியில் இயங்கும் மின்மோட்டார் கிணற்றில் பொருத்தி தரப்பட்டது.
இதுகுறித்து விவசாயி நந்தகுமார் கூறியதாவது:–
இந்த திட்டம் விவசாயிகளுக்கு பேருதவியாக உள்ளது. பகல்நேரத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்மோட்டாரை இயக்கி பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடிகிறது. கோடைகாலங்களில் மின்தடை காரணமாக பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் சிரமப்பட்டு வந்தேன்.
இதில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்கள் சூரியன் இருக்கும் திசை நோக்கி சூரிய காந்தி பூ போல திரும்புவதால் மின்மோட்டார் சீராக இயங்குகிறது. இதன் மூலம் சுமார் 5 ஏக்கர் வரை நீர்பாசனம் செய்ய முடிகிறது. இதை பயன்படுத்தி இயற்கை முறையில் வாழை, தக்காளி, கத்தரி, பாகற்காய், பீர்க்கன் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து லாபம் ஈட்டி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.


0 Comments