மனிதர்களின் உடலில் ஒவ்வொரு நாளும் புதுப்புது செல்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. பழைய செல்கள் இறந்து கொண்டே இருக்கின்றன.
இவ்வாறு செல்கள் தோன்றுவதும், இறப்பதும் சீரான நடைமுறையில் இருக்கவேண்டும். அப்படியில்லாமல் நமது உடலிலுள்ள செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டு, அம்மாற்றத்தால் புதிய செல்கள் தோன்றுவதிலும், பழைய செல்கள் அழிவதிலும் மாறுபாடு நிகழ்ந்தால், அதுவே புற்றுநோய்.
புகைப்பழக்கம், சில மாறுபாடான உணவுகள், சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள இடங்களில் பணியாற்றுவது போன்ற காரணங்களினால் சில செல்களின் வளர்ச்சி தேவைக்கு அதிகமாக இருக்கும். அல்லது தேவைக்குக் குறைவாக இருக்கும். இப்படித்தான் புற்றுநோய் ஆரம்பிக்கிறது. சில வேளைகளில், பெற்றோர்களி டமிருந்தும்கூட பிள்ளைகளுக்கு இந்நோய் வரலாம்.
புற்றுநோய் வந்தபின்னரே அறியக் கூடிய நோய். ஆனால் புற்றுநோய் வரக்கூடிய ஆபத்தைக் குறைப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவற்றில் முக்கியமாக புகையிலை பயன்படுத்தக் கூடாது. கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம். மேலும், முறையான உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.
மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம், புதிய மச்சம் அல்லது ஏற்கெனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள், வெகுநாளாகியும் குணப்படாத புண்கள், கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல், மலசலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம், தொடர்ந்து அஜீரணத்தன்மை, உணவு விழுங்குவதில் பிரச்சினை, விவரிக்க முடியாத விதத்தில் உடல் எடையில் மாற்றம், இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்தக் கசிவு, உடலின் ஏதாவது ஒரு பாகத்தில் தொடர்ந்த வலி - இப்படியான அறிகுறிகள் ஒருவருக்கு இருக்குமாயின் அவர் உடனே புற்றுநோய் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது நலம். ஏனென்றால், மேற்கண்ட அறிகுறிகள் எல்லாம் பிற நோய்களுக்கும் உண்டு. இதனால்தான் பல புற்றுநோயாளிகள் ஆரம்பகாலத்தில் இந்நோய் தங்களுக்கு வந்திருக்கிறது என்பதை அறியாமலேயே நோய் முற்றும் வரை கவனக்குறைவாக விட்டுவிடுகின்றனர்.
ஒருவருக்கு புற்றுநோய் வந்திருக்கிறது என்றால், அந்நோய் எந்த நிலையில் இருக்கிறது என்பதை வைத்துதான் எப்படியான சிகிச்சை அவருக்குத் தேவை என்பதைத் தீர்மானிக்க முடியும். பொதுவாக புற்றுநோய் நோயாளிகளை நான்கு பிரிவினராக மருத்துவ உலகம் பிரித்துப் பார்க்கிறது. முதலாவது ஆரம்ப நிலை. இந்நிலையில் ஒருவர் சிகிச்சைக்கு வந்துவிட்டால் அவர் 99வீதம் அந்நோயிலிருந்து விடுபட்டுவிடலாம்.
இரண்டாவதாக 30லிருந்து50வீதம் வரை நோயின் தாக்கம் உள்ள நோயாளிகள் அதன்பின்னர் மருத்துவரை நாடி வந்துவிட்டால் அந்நோயாளிகளுக்கான சிகிச்சையின் வெற்றி வீதம் 80 விழுக்காடு. மூன்றாவது 50வீதம் முதல்70வீதம் வரை நோய் முற்றியபின்னர் சிகிச்சைக்கான வருபவர்களின் வெற்றிவீதம் 30முதல்50வீதம். இறுதியாக நோய் முற்றாக முற்றிய பின்னர் வருவது. இப்படிப்பட்ட நோயாளிகளை குணப்படுத்துவது கடினம்.
மேற்கண்ட நான்கு கட்டங்களில் நோயின் தன்மையைப் பொறுத்து அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை முறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்ற சிகிச்சை முறைகள் இருக்கும்., புற்றுநோயின் வகை, பாதிப்படைந்த இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பார்.
புற்றுநோய் பற்றிய சந்தேகங்களுக்கு 0091 98402 73511 என்ற கைபேசியிலோsargeon2002@yahoo.com
என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம்.


0 Comments