நாட்டில் பல்வேறு நம்பிக்கை தரும் மாற்றங்கள் குறிப்பாக தேசிய அரசியலில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வந்தமையும், குறிப்பாக முஸ்லிம் சிவில் சமூகம் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டமையும் நாங்கள் அறிந்த விடயம்.
என்றாலும் நாம் எதிர்கொள்ளவிருக்கின்ற பொதுத் தேர்தல், களத்தில் குதிக்கின்ற முகாம்கள் மற்றும் முகங்களைப் பொறுத்தவரை தேசமும் சமூகமும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளமை கவலை தரும் விடயங்களாகும்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை கடந்த கால கையாளாகாத சராணாகதி சூதாட்ட அரசியல் முகாம்கள் அதே வெற்றுக் கோஷங்களோடும், வீராப்புக்களோடும், ஆரவாரங்களோடும் ஆர்பரிப்புக்களோடும் "பழைய குருடி கதவைத் திறடி" என்று அந்தி சந்திகளாக வளம் வரத் தொடங்கியுள்ளனர்.
தேசிய அரசியலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும், இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் இடையே வந்த ஹனுமான் ஆண்டாலும் முஸ்லிம் அரசியலில் முற்றுமுழுதான மாற்றம் ஒன்று ஏற்படாவிடின் எதிர்காலம் சவால்கள் நிறைந்ததாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இன்று முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள அத்துணை சவால்களுக்குப் பின்னாலும் அரசியல் இராஜதந்திர நகர்வுகள் இருக்கின்றன, எமது கடந்தகால அரசியலின் அறுவடை களையே நாம் இன்று செய்து கொண்டிருக்கின்றோம் .
மாற்றங்களை அடுத்தவர்கள் ஏற்படுத்தும் வரை காத்திருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள், மாற்றத்தின் பங்காளர்களாய் இருப்பவர்கள் சாதனையாளர்கள். எந்தக் குதிரை வெல்கின்றது என்பதனைவிட எந்தக் கொள்கை வெல்கின்றது என்பதுவே முக்கியம்.
தெளிவான தேசிய சமூக பார்வையும்,கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை.
எங்கோ ஓரிடத்தில் நடக்கும் அநீதி அக்கிரமங்கள், அடக்குமுறைகள் கண்டு ஆர்ப்பரிக்கும் எங்கள் இதயத் துடிப்புக்கள்...கண்ணீர்கள் ... சிந்தனைகள், சித்தாந்தங்கள்...
இங்கு நாம் இருக்கின்ற இடத்தில் இடம் பெறும் அநீதி அக்கிரமங்களுக்கெதிராக எம்மை ஒரு சில எட்டுக்களாவது முன்னே நகர்த்தாவிடின்...
கைசேதமே..! அவை, அங்கும் இங்கும் எங்கும் நடக்கின்ற அநீதி அக்கிரமங்களில் எங்களையும் பங்குதாரர்களாக ஆக்கி விடுகின்றன.


0 Comments