Subscribe Us

header ads

எதிர்கால நாடோடிகளும் , நாடோடி அரசியலும்


வில்பத்து விவகாரம் இப்போது ஒரு தேசிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள சந்தர்பத்தில், பெரும்பான்மை இனவாத ஏற்ற்பாட்டளர்களாலும் , அவர்களின் ஊது குழல்களாக இருக்கும் சில தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகங்களும், இந்த விடையத்தை திசை மாற்றி , வேறு ஒரு திரிபுபட்ட விடயத்தையும், எம் மக்கள் மீது அபாண்டமான நில அபகரிப்பு மற்றும் சுற்றுப்புறச்சூழல் மோசடி என்ற கோணத்தில் சர்வதேசத்துக்கு எடுத்து சென்று, ஒரு சமூகத்தின் இருப்பிடத்தையே கேள்விக்குறியாக்கா முயற்சிக்கும் இந்த தருணத்தில் , சில அதிர்ச்சியான நல்ல விடையங்களும் பெரும்பான்மை ஆளும் அரசியலில் இருந்து அத்தி பூத்தாற்போல் வராமலும் இல்லை.

அந்த வகையில், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் சமீபத்திய அறிக்கையும் , அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லையின் கூற்றும் பசில் ராஜபக்சவின் அறிக்கையும் மிகவும் கவனிக்கபடவேண்டியது மட்டுமல்ல, எமது அரசியல் தலைமைகளில் பலருக்கு வெட்கத்தையும் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

இந்த விடையத்தை , ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்களின் அரசியல் சார் விடயமாக கருதாமல் , அவர்களின் அடிப்படை இருப்பு சமபந்தமான பிரச்சினை என்றே கருத வேண்டும், இந்த விடையத்திட்காகவேனும் எமது அரசியல் தலைமைகள் , பெரும்பான்மை இன தூய சிந்தனை உள்ள தலைவர்களுடன் ஒன்றுபட்டு தீர்கமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், இங்கு அதற்கான சாத்தியக்கூறுகளே தென்படுவதாக எமக்கு புலப்படவில்லை, மாறாக, இந்த விடையத்தை , சிலர் தமது அரசியல் இருப்புக்காகவும், சிலர் இந்த விடயத்தை கண்டும் காணதது போல இருப்பதன் மூலம், பெரும்பான்மை இனவாதிகளுக்கு நல்ல பிள்ளை வேடம் தரிப்பது போலவும், இன்னும் சிலர் இவை எதுவுமே நடைபெறாதது போல மௌனமாக இருப்பதுவும் , நாம் வாங்கி வந்த அரசியல் வங்குரோத்து நிலை என்பதை தவிர வேறொன்றுமில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

இப்போது இந்த விடயத்தில், அந்த பகுதி மக்களை பிரதிநிதிப்படுத்தும் அமைச்சர் ரிசார்த் பதியுதீன் மிகவும் சவால்களுக்கு மத்தியில் இந்த மீள் குடியேற்ற செயற்பாட்டை முன்னெடுத்து வரும் வேளை, தம்மை இலங்கை வாழ் சகல முசல்மான்களுக்குமான தலைவர் அல்லது தலைவர்கள் எனவும், சர்வேதசத்திட்கு தம்மை தேசிய தலைவர்களாக பிரகடனப்படுத்தியவர்கள் ,இதுவரை வாய் மூடி மௌனமாக இருப்பது பலத்த சந்தேகத்துடன் கூடிய கண்டனத்துக்கு உட்பட்டதாகும்.

பெரும்பான்மை தலைவர்களில் பலரே, இந்த விடையம் மனிதாபிமான முறையில் அணுகப்படவேண்டும் என்று அறிக்கை விட்டதன் மூலம், இந்த விடயத்தின் உள்ளார்ந்த உணர்வுபூர்வமான பிரச்சனயை நாம் உணர்ந்தும் அறிந்தும் கொள்ள முடியும். அப்படியான ஒரு தருணத்தில், முஸ்லிம் தேசிய தலைவர் அல்லது தலைவர்கள் இந்த விடயத்தில் மௌனமாக இருப்பது , சிலவேளை , இவ்விடையத்தில் மும்முரமாக இயங்கும் அப்பிரதேச அமைச்சரை பதவியில் விட்டு அரசு தூக்கி எறியவும், பின் வேறு பல குற்றச்சாட்டில் சிறைக்கு அனுப்புவதன் மூலம் தாம் காணும் கனவான இலங்கை முஸ்லிம்களின் ஏகபோக தலைவன் என்ற பெயர் எடுக்கவா என்ற சந்தேகம் வலுப்பெறுவதை இங்கு தவிர்க்க முடியாமல் தான் உள்ளது.

அரசியலில் மௌனம் என்பது மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல, காலம் கடந்த பின் கலைக்கப்படும் மௌனம் கூட அபத்தமானது என்பதை அறியாமலா எமது அரசியல் தலைமைகள் அரசியல் என்னும் தொழிலை செய்கின்றனர். வாழ்வதற்கு வீடே இல்லாமல் அல்லோலகல்லோலப்படும் எமது சகோதர்களில் ஒரு கூட்டம் இருக்கும் போது , எதிர்வரும் தேர்தலை மையாமாக வைத்து , மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டடங்களை திறப்பதிலும், அங்கு இடப்படும் மாலைகளின் சுகத்திலும் மயங்கி கிடக்கும் எம் தலைமைகளே , உங்கள் ஒரப்பார்வையை கொஞ்சம் உயர்த்தி இந்த மக்களுக்காக பார்க்கக்கூடாதா !!

எம் சமூகத்தின் அரசியல் மட்டுமல்ல, அதை நம்பியுள்ள மக்களும் இனி நாடோடிகளே என்பதை நாம் உணரவும் , கண்டு கொள்ளவும் வெகு நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

Post a Comment

0 Comments