காவல்துறை நிதி குற்ற புலனாய்வு பிரிவு நிறுவ மும்முரமாக செயற்பட்ட நாங்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பின்னர் இதற்கான விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவும் கலந்துக்கொண்டுள்ளார்.
காவல்துறை நிதி குற்ற புலனாய்வு பிரிவு தொடர்பாக பிரதமரை மாத்திரம் இலக்கு வைத்து குற்றச்சாட்டப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லையா என ஊடகவியலாளர்கள் வினவிய போது அதற்கு பதில் அளித்த அவர், ஜனாதிபதி இது குறித்து விழிப்புணர்வுடன் உள்ளார்.
குறித்த காவல்துறை நிதி குற்ற புலனாய்வு பிரிவு தொடர்பில் ஜனாதிபதி மக்களுக்கு வாக்கு கொடுத்துள்ளதாகவும் இதன் போது சுட்டிக்காட்டினார்.
மேலும் நாம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் இவ் காவல்துறை நிதி குற்ற புலனாய்வு பிரிவு நிறுவுவதற்கு முன் நின்றவர்கள் அதன் விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் பிரதமர் பொது நலவாய அமைப்பின் ஆதரவை நாடுவது அவசியமற்ற ஒரு விடயம் எனவும், இந்நாட்டு நீதிதுறைக்கு அவமானப்படுத்தும் ஒரு செயலாகும் என இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர் கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலமைப்பிற்கமைய வெளிநாட்டு அறிவுரை பெற்றுக்கொள்வது இந்நாட்டு நீதித்துறையை அவமதிப்பதோடு பயத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாடாகுமென அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான ஒரு தீர்மானம் குறித்தும், காவல்துறை நிதி குற்ற புலனாய் பிரிவு தொடர்பிலும் பிரதமர் தற்போது மனவேதனையடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமைச்சரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையிலேனும் செயற்படுவது குறித்து நம்பிக்கை இல்லை என சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.


0 Comments