Subscribe Us

header ads

வரலாற்றில் முதல் தடைவையாக தபால்காரனை காணும் ஈரளக்குளம் கிராமம்

காமிலா பேகம்


வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட ஈரளக்குள கிராமசேவகர் பிரிவுகளுக்கு தற்காலிக தபால்காரர் சேவை நேற்று (25) திங்கள் கிழமை ஆரம்பமாகியுள்ளது.

கடந்தகால யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக ஈரளக்குள பிரதேசம் காணப்படுகின்ற நிலையில் பல்வேறுபட்ட அடிப்படை பிரச்சினைகள் காணப்படுகின்றது. குறித்த கிராமசேவகர் பிரிவுகளில் நான்கு பாடசாலைகள், கிராமசேவகர் அலுவலகம், சுகாதார பரிசோதகர் அலுவலகம் போன்றவை இருந்தும் ஒரு தபால்சேவை காணப்படாத நிலை பெரும் குறைபாடாகவே இருந்தது.

குறித்த பிரசேங்களில் வசிக்கும் மக்களின் கடிதங்களை கடந்த காலங்களில் இருந்து தங்களின் உறவினர் மற்றும் கிராமசேவகர் ஊடாகவே வழங்கப்பட்டு குறுகிய சேவை நடைபெற்றது. அதனால் பல்வேறுபட்ட பிரச்சினையை பொதுமக்கள் எதிர்நோக்கியிருந்தனர்;. குறிப்பாக நேரத்துக்கு உரியவரிடம் உரிய கடிதம் கிடைக்கவில்லை, நீதி மன்ற கடிதங்கள், வங்கி கணக்கு கடிதங்கள் போன்ற பல தகவல் அடங்கிய கடிதங்கள் தாமதித்து கிடைத்ததினால் மக்கள் பெரும் அசோகரியங்களை நோக்கிவந்த நிலையில் தற்காலிக தபால் சேவையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


ஈரளக்குள பிரதேசத்தைப் பொறுத்தவரை மிகவும் பின்தங்கிய விவசாய குடும்பங்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதன் பின்னரான குடியேற்றகளில் தங்கியிருக்கின்றனர். ஈரளக்குளம் உட்ப்பட வேரம், பெருமாவெளி, இலுக்குபொத்தாணை, பெரியவட்டவான், குருகண்ணாமடு, இலாவாணை, குடாவெட்டை, ஆவிட்டியாவெளி, சின்னதுரைசேனை, முந்தன்குமாரவெளி போன்ற பிரதேசங்களில்
சுமார் 363 குடும்பங்கள் குடியேறி தங்களின் வாழ்வாதார நிலையை மிகவும் கஸ்டத்தின் மத்தியில் நடாத்திவருகின்றனர்.


சித்தாண்டியில் இருந்து சந்தனமடு ஆற்றைக்கடந்து சுமார் 12 கிலோ மீற்றர் தூரம் தபால்காரர் ஈருளக்குளத்துக்கு காட்டு வழியூடாக செல்லவேண்டி இருப்பதுடன் பல்வேறுபட்ட சிரமங்களும் காணப்படுகின்ற நிலையில் இனிவரும் காலத்தில் பரந்தளவு நிலப்பரப்பையும் அதிகளவான கிராமங்களையும் உள்ளடக்கிய ஈரளக்குள பிரதேசத்துக்கென நிரந்தர தபால் அலுவலகத்தை அமைத்துதரவேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


குறித்த கிராமத்தின் எழுச்சிக்கு சந்தனமடு ஆற்றுக்கு ஒரு நிரந்த பாலம் அமைத்து தருமிடத்து தபால்சேவை மற்றும் அவசர சிகிச்சைக்கான அம்புலன்ஸ் சேவை மற்றும் போக்கவரத்து சேவை போன்ற தேவைகளை குறித்தளவு செய்வதுடன் மக்களின் தேவைகளை ஏற்படுத்திக்கொடுக்க வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.


நேற்றைய தினம் சித்தாண்டி உப தபால் அலுவலகத்தில் இருந்துவந்த தபால்காரரிடம் இருந்து முதன்முதலாக தனது கடித்தை பெற்றுக்கொண்ட வேரத்தில் வசிக்கும் நல்லதம்பி சரஸ்வதி என்ற பெண் கருத்துதெரிவிக்கையில்


நாங்கள் யுத்தத்தில் பாதிக்கப்ட்டு பல்வேறுபட்ட அடிப்படை பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றோம். அந்தவகையில் எங்களின் கடிதங்களை நாங்கள் சித்தாண்டி தபால் அலுவலகத்திலே பெற்றுக்கொள்ள நேரிட்டது. எவ்வளவோ காலத்துக்கு பிறகாவது ஏனைய இடங்களைப் போல் எங்களின் காலடியில் கடிதம் கிடைக்கின்றமை மிகவும் சந்தோசமாக இருக்கு அனைவருக்கும் நன்றி, எனவே எங்களின் பிரச்சினையை அறிந்து எங்கள் கிராமத்துக்கு இதுபோன்ற பல சேவைகளை உரிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் முன்வந்து பெற்றுதரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.-Sl Muslim-

Post a Comment

0 Comments