பிரித்தானியா நாட்டில் சட்டவிரோதமாக குடியேறி பணிபுரிந்து வரும் வெளிநாட்டினர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க தனது அமைச்சரவைக்கு பிரதமர் கேமரூன் கூடுதல் அதிகாரங்கள் வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியா நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டினர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கும் ஆலோசனை கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில், வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக குடியேறி, நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் நபர்களின் ஊதியத்தை பறிப்பதோடு அவர்களை நாடுகடத்தும் திட்டம் குறித்து பிரதமர் அறிவிப்பை வெளியிடுவார் என பிரித்தானியாவில் வெளியாகும் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன.
பணியாளர்களை தெரிவு செய்வதற்காக வெளிநாடுகளில் விளம்பரம் செய்வதற்கு முன்னர், அது குறித்து முதலில் பிரித்தானியாவில் விளம்பரம் செய்யப்பட வேண்டும். இந்த விதிமுறையை மீறினால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படும்.
மேலும், பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர்களின் வங்கி கணக்குகளையும், அவர்களின் இருப்பு தொகையையும் கணக்கிடும் வகையில் அனைத்து வங்கிகளுக்கு அதிரடி உத்தரவு அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தனது அமைச்சரவைக்கு பிரதமர் கேமரூன் கூடுதல் அதிகாரங்கள் வழங்க உள்ளார்.
இது மட்டுமில்லாமல் பிரித்தானியாவில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்கள் குறித்து புதிய சட்ட திட்டங்களையும் அமல்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அடுத்த வாரம் பிரித்தானியா ராணியான இரண்டாம் எலிசபெத்தின் சிறப்பு உரையில் இடம்பெறும் என தெரிகிறது.
மேலும், ஐரோப்பிய ஐக்கிய நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா தொடர்ந்து நீடிப்பதா இல்லையா என்ற அதிகாரப்பூர்வமான அரசு பேச்சுவார்த்தை நாளை Riga நகரில் நடைபெறும் உச்சி மாநாட்டில் தொடங்க உள்ளதால் பிரித்தானிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


0 Comments