கார் விபத்தில் படுகாயமடைந்து முதுகுத்தண்டிலிருந்து தலை எலும்பு நிலைகுலைந்துப் போய் உயிருக்கு போராடிய இங்கிலாந்து வாலிபரின் உயிரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் காப்பாற்றியுள்ளார்.
லண்டனில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த டோனி கோவனின் கார் கட்டுப்பாட்டை இழந்து டெலிபோன் பூத் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தால் டோனி கோவனின் இதயமே நின்று போனது. அங்கிருந்த மருத்துவ குழு செய்த முதலுதவியால் மீண்டும் அவரது இதயத்துடிப்பு சீராகத் தொடங்கியது.
பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதுகெலும்பிலிருந்து அவரது தலை எலும்புகள் விலகி விட்டதால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று கைவிரித்தனர். இந்நிலையில் டோனிக்கு சிகிச்சை அளிக்க முன் வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான ஆனந்த கமட், டோனியின் தலை எலும்புகளை முதுகெலும்புடன் இணைத்து இரும்பு பிளேட் மற்றும் போல்ட்டுகள் வைத்துப் பொருத்தி ஆபத்தான அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
தற்போது சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் டோனி விரைவில் வீடு திரும்ப உள்ளார்.


0 Comments