அண்மைய சில மாதங்களாக சிங்கள ஊடகங்கள் பல முன்னெடுத்துவந்த வில்பத்து தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளதாக எண்ணிய போதிலும் மீண்டும் அந்த முகம்கள் தமது சுய உருவத்தை மீண்டும் காண்பிக்க ஆரம்பித்துள்ளன.
இருந்த போதும் கடந்த காலங்களில் இந்த பொய் பிரசாரங்களுக்கு எதிராக உண்மையினை வெளிக்கொண்டுவரும் வகையில் தமிழ் ஊடகங்களும்,இணையத்தளங்கள்ளும்,சமூக வலைத்தளங்களும், ஏன் தனிமனிதர்கள் கூட தமது முழுமையான சக்தியினை பயன்படுத்தி வழங்கிய ஆதரவுக்கும்,ஒத்துழைப்புக்கும் தமது நன்றியினை அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது –
இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த காலங்களில் கூட்டாக செயற்பட்ட இனவாத சக்திகள் இன்றும் அந்த பணியினை செய்து கொண்டு தான் இருக்கின்றது.
அந்த வகையில் வில்பத்து காடுகளை அழித்து முஸ்லிம்களை குடியேற்றுவதாக தெரிவித்து கடும் போக்கு சக்திகளும்.
அதற்கு துணை போயுள்ள ஊடகங்களும் மேற்கொண்ட பிரசாரம்,எமது வடக்கு முஸ்லிம்களின் உள்ளத்தை பெரும் வேதனைக்குள்ளாக்கியது.
எமக்கான ஒரு ஊடகம் இல்லை என்பதை புரிந்து கொண்ட இந்த சிங்கள ஊடகங்கள் திட்டமிட்டு நாள்தோறும் இல்லாத பொல்லாதவற்றை ஒளிபரப்பி வந்தன.
இந்த நிலையில் வன்னி மாவட்ட முஸ்லிம்களின் மக்கள் பிரதி நிதி என்ற வகையில் தனித்து நின்று இந்த சக்திகளுக்கு எதிராக நான் செயற்பட ஆரம்பித்த போதும்,அல்லாஹ்வின் துணையுடன் அந்த சவால்களை சந்தித்தேன்.
அத்தோடுமட்டுமல்லாது இந்த சமூகத்தின் பாதுகாப்புக்கும், விடிவுக்குமாக எமது நாட்டிலும், சர்வதேசத்திலும் வாழும் எமது சகோதர,சகோதரிகள் இறைவனிடம் பிரார்த்தனைகளை செய்ததுடன்,தொலைபேசி மூலம் என்னுடன் தொடர்பு கொண்டு அவர்களது ஆலோசனைகளையும் கூறி ஊக்கப்படுத்தினர்.
இதே போல் எமது நாட்டில் உள்ள இளம் சட்டத்தரணிகள், கல்விமான்கள், துறைசார்ந்தவர்கள் என பல தரப்பினரும் இரவு பகல் பாராது எமது இந்த சமூகத்தின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தரும் போராட்ட பயணத்தில் எனக்கு பக்கத்துணையாக இருந்தனர்.
இவற்றுக்கு எல்லாம் மேலாக சமூக வலைத்தளங்கள்,பேஸ் புக்,டுவிட்டர் உள்ளிட்டவற்றினை கொண்டு எமது இந்த முயற்சிக்கு உறுதுனை புரிந்ததை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாகும்.
ஆகவே எல்லா வழிகளிலும் இந்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிரான சவால்களை முறியடிக்க உதவி செய்த அனைவருக்கும் வடக்கு
முஸ்லிம்களின் சார்பில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments