ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சர்வதேச அணி பாகிஸ்தானுக்கு கிரிக் கெட் போட்டியில் விளையாட சென்றுள்ளது.
நேற்று காலை 1.45 மணிக்கு சிம்பாப்வே வீரர்கள் லாகூர் விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இது முக்கிய நிகழ்வு.
விமான நிலையத்திலிருந்து வீரர்கள் தங்கும் ஐந்து நட்சத்திர விடுதி வரை ஆயிரக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு அளித்தார்கள். 16 வீரர்கள், 9 அணி அதிகாரிகள், 5 கிரிக்கெட் சபை நிர்வாகிகள் ஆகியோர் அடங்கிய குழு, பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. சிம்பாப்வே அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த கிரிக்கெட் தொடருக்கு நடுவர்களை நியமிக்க, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு சொந்தமான நடுவர்களை நியமித்துள்ளது.
2009இல் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது, லாகூரில் வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன்பின், எந்த அணியும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.
6 ஆண்டுகள் கழித்து ஒரு சர்வதேச அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது மற்ற அணிகளிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட்சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.-VK-


0 Comments