முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு சட்டத்தரணி ஊடாக கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி இந்த நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுல பிரியதர்சன டி சில்வா என்ற சட்டத்தரணியினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 7ம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் இந்த ஊடகவயிலாளர் சந்திப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் 18 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை குவித்துள்ளதாக மங்கள ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம் சுமத்தியுள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக ஒரு பில்லியன் ரூபா நட்ட ஈட்டை 21 நாட்களுக்குள் வழங்க வேண்டுமெனவும் அவ்வாறு வழங்கத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


0 Comments