நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவி வகிப்பதால் குறிப்பிட்ட பிரதேசத்துக்கோ, அல்லது குறிப்பிட்ட இனத்துக்காகவோ ஆதரவாக இயங்கப்போவதில்லை. எனது சேவை பாரிய சிந்தனையில் அனைவரும் விரும்பும் வகையில் இடம்பெறும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மாவடிச்சேனையில் இடம்பெற்ற விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போது குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரை நிகழ்த்துகையில்:
கிழக்கு மாகாண முதலமைச்சராக என்னை நான் சார்ந்த கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் நியமித்த போது ஒரு சிலர் தவிர ஏனைய அனைவரும் என்னை வரவேற்றனர்.
சபையில் முதலமைச்சராக பதவி பாரமெடுப்பதில் ஏற்பட்ட சில முறுகல் நிலைகளின் போது எந்த அனுக்கூலமும் எதிர்பாராமல் என்னை முதலமைச்சராக்க சில உறுப்பினர்கள் கையொப்பமிட்டனர்.
தமிழர் விடுதலைக்கூட்டணி, ஐக்கிய மக்கள், சுதந்திரக்கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, போன்ற கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து இன்று கிழக்கின் ஆட்சி நடைபெறுகிறது.
நாட்டில் நல்லாட்சி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எந்தளவு தன்னை அர்பணித்து செயல் படுகிறாரோ அது போன்றே நானும் கிழக்கில் நல்லாட்சி அமைய வேண்டும் என்று முழுமூச்சாய் செயற்படுகிறேன்.
ஒரு சிலரின் பதவிக்காக மக்களின் அபிலாசைகளை குழிதோண்டி புதைத்துவிட முடியாது. கிழக்கில் கடந்த 30 வருட யுத்தம் மற்றும் இதர பாதிப்புக்களால் மக்களுக்கு ஏற்பட்ட துக்ககரமான சகல எண்ணங்களையும் மறந்து சந்தோசமாக இந்த நாட்டிலும், கிழக்கில் உள்ள நமது மக்களும் வாழ வேண்டும் என்பதில் உண்மையாக செயற்பட அனைவரும் முன்வரவேண்டும்.
கிழக்கு மாகாண முதலமைச்சராக முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இருப்பதால் நமக்கு அநீதி இளைத்து விடுவார், நாம் கேட்பதனைத்தரமறுத்து விடுவார், என்று நமது சகோதர இன சகோதரர்கள் கந்தசாமியோ, அல்லது அப்புகாமியோ நினைத்து விடக்கூடாது.
சிங்களவர், தமிழர், முஸ்லிம், இந்நாட்டில் வாழும் அனைத்து மதங்களும் ஒன்றேதான் ஒரே முறையில் நடத்தப்படவேண்டும் அதற்காக அனைவரும் விரும்பும் ஒருவனாக நான் என் கடமைகளைச் செய்துகொண்டு வருகின்றேன் எப்போதும் செய்வேன்.
நான் எறாவூருக்கோ, காத்தான்குடிக்கோ, கல்குடாவுக்கோ, சொந்தமான ஒருவனும் அல்ல. இந்த கிழக்குமாகாணத்தில் இருக்கும் ஒவ்வொரு கிராமம், பிரதேசம், நகரம், மாநகரத்துக்கும் உரியவனாகவே எனது சேவையைத்தொடர இருக்கிறேன் தொடருகிறேன்.
கிழக்கு மாகாணத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்று பட்டு ஒவ்வொரு விடையங்களை மேற்கொள்கின்றபோது எந்த இடையூறுகளும் இல்லாமல் அதனை வெற்றியடைய செய்யலாம்.
இதற்கு தேவையானது ஒற்றுமை மட்டுமே. நாம் என்றுமே கிழக்கு மாகாணம் இலங்கை மக்கள் என்ற ஒரே கொள்கையுடன் இருப்போம்.
ஒவ்வொருவரும் தான் சார்ந்த மதம், கலாச்சாரத்தினை பின்பற்றுகின்றபோது யாரும் அதற்கு இடையூறாக இருக்காமல் அதற்குரிய மரியாதையை கொடுக்கின்ற போது அங்கு ஒற்றுமை ஏற்படுகிறது. அதுதான் இன்று தேவையாக இருக்கிறது.
எனவே ஒன்றுபடுவோம் சகல விடையங்களிலும் வென்றுவிடுவோம் ஒரே மக்களாய்.
கல்குடா மக்களுக்கு முக்கிய தேவையாக இருந்த குடிநீர் வசதி ஏற்பாடு செய்யும் நிகழ்வின் ஆரம்பக்கட்ட வேலையிலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது அமைச்சின் மூலம் முதற்கட்ட நிதியாக சுமார் 72 கோடி ரூபா செலவில் ஒருவருட வேலையாக ஆரம்பித்திருக்கும் நீர் வழங்கள் ஆரம்ப கட்ட நிகழ்வில் கெளரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்.
இவ்விழாவிற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான அலிஸாஹிர் மௌலானா, சிப்லி பாறுக், ஜே.எம். லாஹிர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியார், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.அஹமத், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என்.முபீன், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் ஆகியோர் உட்பட அரசியல் பிரமுகர்களும், உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


0 Comments