Subscribe Us

header ads

புத்தளம் நகர சபை, பிரதேச சபைகளுக்கு, புதிய உள்ளூராட்சிமன்ற வட்டாரங்கள்..... உள்ளூர் மற்றும் இடம்பெயர்ந்த மக்களும் தத்தமது பிரதிநிதிகளே உருவாக்க ஏற்பாடு....


-K.A. Baiz-
உள்ளூராட்சிமன்ற வட்டார முறையை  ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டுவருகிறது. முழு உள்ளூராட்சிமன்ற எல்லைக்குள், தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கும், வேலை திட்டங்களை செய்வதற்கும் பொறுப்பாக இருந்த உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள்; குறிப்பிட்ட வட்டாரங்களுக்கு மாத்திரம் பொறுப்பாகவும், அபிவிருத்திகளுக்கு பொறுப்பாகவும் மாற இருக்கின்றார்கள்.
அதனடிப்படையில் புத்தளம் தேர்தல் தொகுதியின் உள்ளூராட்சிமன்ற வட்டாரங்கள் நிர்ணயம் செய்யும் வேலையை கடந்த அரசாங்க காலத்தில் முன்னெடுத்தபோது, அதற்கு அத்துறை சார்ந்தோர்களோடு கலந்துரையாடி நாம் முன்மொழிந்த, புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய வட்டார எல்லைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவை சம்பந்தமான மேலதிக ஆலோசனைகள் புதிய அரசாங்கத்தினால் கோரப்பட்டுள்ளன.
கல்பிட்டி பிரதேச சபை சம்பந்தமாக நம்மால் முன்மொழியப்பட்ட வட்டாரங்கள் பற்றிய யோசனை உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. அதற்கு கல்பிட்டி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இன விகிதாசார பரம்பலின் அடிப்படையில் உறுப்பினர்களை தேர்தெடுக்கும்படி நாம் கேட்டிருக்கின்றோம்.
அதேபோல் ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேச சபைக்குட்பட்ட உடப்பு, புளிச்சாக்குலம், புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களுக்கும் இன விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்கள் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்றும் நாம் முன்மொழிந்துள்ளோம்.
புத்தளம் நகர சபையைப் பொறுத்தளவில் ஏற்கனவே இருக்கின்ற வட்டாரங்களோடு சேர்த்து இரண்டு வட்டாரங்களை சேர்த்துத்தர கடந்த அரசாங்கம் இணங்கியதற்கு அமைய நகரின் ஆகப்பெரிய கிராம சேவகர் பிரிவான புத்தளம் கிழக்கு  (4 ஆம் வட்டாரம்) பிரிவை மூன்று உறுப்பினர் வட்டாரங்களாக பிரிப்பதற்கும், அடுத்த பெரிய கிராம சேவகர் பிரிவுகளான, புதுக்குடியிருப்பு (9 ஆம் வட்டாரரம்) கிராம சேவகர் பிரிவிற்கு இரண்டு உறுப்பினர்களையும், தில்லையடி (2 ஆம் வட்டாரம்) கிராம சேவகர் பிரிவிற்கு இரண்டு உறுப்பினர்களையும் பெற்றுக்கொள்ள இவ்விரண்டு வட்டாரங்களாக பிரிக்கப்படுவதோடு, மிகச்சிறிய கிராம சேவகர் பிரிவுகளான ஜும்மா பள்ளி குடியிருப்பு (7 ஆம் வட்டாரம்), புத்தளம் வடக்கு (8 ஆம் வட்டாரம்) ஆகிய இரண்டையும் இணைத்து ஒரு வாட்டாரமாகவும், மரிக்கார் வீதி (5 ஆம் வட்டாரம்), பழைய ஜும்மா பள்ளி (6 ஆம் வட்டாரம்) ஆகிய இரண்டையும் இணைத்து ஒரு வட்டாரமாகவும் ஆக்குவதற்கு நாம் முன்மொழிந்திருக்கின்ற ஆலோசனைகள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை காணப்படுகிறது.
புத்தளம் பிரதேச சபை எல்லைக்குள் முஸ்லிம், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற முள்ளிபுரம் பிரதேசத்திற்கு தனியொரு உறுப்பினரும், மணல்தீவு பிரதேசத்தை மன்னார் பிரதான வீதியினூடாக கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரித்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மேற்குப் பிரிவில் (வேப்பமடு)  முஸ்லிம் உறுப்பினர் ஒருவரையும், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்குப் பிரிவில் (மணல்தீவு) தமிழ் உறுப்பினர் ஒருவரையும் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் அங்கும் முஸ்லிம் உறுப்பினர் ஒருவரை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பாலாவி பிரதேசத்தை சிங்கள உறுப்பினர் ஒருவர் பிரதிநிதித்துவப்படுத்துவதனால், பாலாவி, பொத்துவில்லு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி எருக்கலம்பிட்டியிலிருந்து, பாலாவி பரிதாபாத் வரையான முஸ்லிம் பகுதிகளை ஒன்றிணைத்து முஸ்லிம் உறுப்பினர் ஒருவரை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த ஏற்பாடுகளினூடாக புத்தளத்தில் வாழுகின்ற உள்ளூர் மக்கள் மாத்திரமின்றி இடம்பெயர்ந்து வாழும் மக்களும் தத்தமது பிரதிநிதிகளை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments