வெளிநாட்டு வாழ் இஸ்லாமியர்கள் எதிர் நோக்கும் ஒரு பெரும் சவால், தங்கள் அடுத்த சந்ததியை எப்படி தம் கலை கலாச்சார விழுமியங்களுடன் வளர்ப்பது என்பதுவே, எதிர்காலத்தில் அவர்கள் சமூகத்துக்கு முகம் கொடுக்க கூடிய கல்வியை கொடுப்பதுடன், தான் சார்ந்த சமுகம் சம்பந்தமான அறிவை வளப்படுத்தும் முகமாக, நியூசிலாந்து வாழ் இஸ்லாமியர்களால் நடாத்தப்படும் ஸ்ரீலங்கன் சொஸைட்டி ஒஃப் நியுசிலாந்த் ( SLSNZ.ORG ) அமைப்பினால் ஆக்லாந்து வாழ் இஸ்லாமிய குடும்பங்களுக்காக நடாத்தப்படும் மூன்று நாள் வருடாந்த முகாம் 7 ஆவது முறையாகவும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் நியூசிலாந்து நாட்டில் ஹுனுவா நீர்வீழ்ச்சி ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாகும் அங்கு நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் அமைந்துள்ள கொகாகோ லொட்ஜ் என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை மதியம் வரை இம்முகாம் நடாத்தப்பட்டது.
சிறுவர்களுக்கான தலைமைத்துவப்பயிற்சிகள் அடங்கலாக "லோ ரோப்" எனப்படும் கயிற்றின் மேல் நடக்கும் பயிற்சி "ஆர்ச்சரி" என்றழைக்கப்படும் வில்வித்தை போன்றவை சர்வதேச தரத்துக்கமைய வெளிவாறி பயிற்றுவிப்பாளர்களால் பயிற்றுவிக்கபட்டதுடன், சிறுவர்களது மார்க்க ரீதியான அறிவை வளர்க்கும் முகமாக தினமும் மஹ்ரிப் தொழுகைக்கும் இஷா தொழுகைக்குமான இடைப்பட்ட நேரத்திலும், சுபுஹு தொழுகைக்கு பின்னரும் இஸ்லாமிய வினா விடை போட்டிகள் மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் கிழக்கு மாகாணத்தில் ஹாபில்களுக்கான மத்ரஸாவை நடாத்திவரும் மருதமுனையை சேர்ந்த மௌலவி அபூஉபைதா ஹாபில் அவர்களால் நடாத்தப்பட்டமை நியூசிலாந்து வாழ் இலங்கை இஸ்லாமிய சிறார்கள் பெற்ற ஒரு வரபிரசாதமாகும். அதுபோன்று அவரே வியக்கும் வகையில் சிறார்கள் இஸ்லாமிய கல்வியில் ஆர்வமாக இருந்ததும் ஒரு சிறப்பம்சமாகும்.
அது மட்டுமன்றி சிறுவர்கள், இளைஞர்கள், மற்றும் வயது வந்தவர்களுக்கென்று தனிப்பட்ட பல அறிவார்ந்த நிகழ்ச்சிகளும் பொது அறிவு போட்டிகளும் இஸ்லாமிய நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிட்டு கூறக்கூடிய விடயமாகும், நிகழ்ச்சிகள் அமைப்பின் செயலாளர் ஜெரீத் ஆப்தீன் அவர்களாலும், உபதலைவர் அரபாத் காசிம் அவர்களாலும், முன்னால் தலைவர் டாக்டர் நவாஸ் இப்ராஹீம் மற்றும் அல் ஹாபில் இஸ்ரத் அவர்களாலும் சிறப்பாக தொகுத்து வழங்கப்பட்டன.
இம்முகாமை வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்காக பாடுபட்ட SLSNZ அமைப்பின் தலைவர் சகோதரர் பாரூக் கலந்தர் உட்பட அனைத்து உறுப்பினர்களுக்கும் நியூசிலாந்து வாழ் இஸ்லாமிய சமூகத்தினர் நிகழ்ச்சியின் முடிவில் தம் அன்பான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.
Munas Arafath Mohamed Cassim










0 Comments