Subscribe Us

header ads

மகிந்தவினை அடக்கும் மைத்திரியின் திட்டமா..??



முன்னாள் அமைச்சர் பசில் கைது..!! கோத்தபாயவிற்கு நீதிமன்றம் அழைப்பானை..!! முன்னாள் ஜனாதிபதி மகிந்தவினை விசாரிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வீடு செல்கிறது..!! போன்ற செய்திகள் தான் இன்று ஊடக உலகில் மிக முக்கியமான பேசு பொருளாகும்.இது ஏன்..?? ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனா பதவியேற்று நூறு நாட்கள் கழியும் இத் தருவாயில் இது ஏன் நடக்கிறது..?? இவர்கள் மீதான குற்றச் சாட்டுகளினைச் சொல்லிச் சொல்லியே தேர்தல் பிரச்சாரங்கள் செய்த மைத்திரி அணியினருக்கு ஏன் தேர்தல் முடிந்த உடனே நடவடிக்கை எடுக்கமுடியாமல் போனது..?? இவற்றை எல்லாம் வைத்து சிந்தித்தால் சில விடயங்களிற்கான தெளிவினைப் பெறலாம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கிந்த ராஜ பக்ஸ தேர்தலில் தோல்வி என்ற செய்தி கிட்டியதும் முன்னாள் ஜனாதிபதி கிந்த ராஜ பக்ஸ வேறு வழிகள் மூலம் ஆட்சியினைக் கைப்பற்றும் முயற்சிகளில் முனைப்புக் காட்டியதாகவும்,இதன் மூலம் நாட்டில் இரத்த ஆறு ஓடும் நிலை தோற்றம் பெற்றதாகவும்,இதனை அறிந்து விரைந்த மைத்திரி அணியினரின் சில உறுதி மொழிகளின் பின்பே இச் செயலினைக் கை விட்டு ஆட்சியினை மைத்திரி இடம் ஒப்படைத்ததாக செய்திகள் அந் நேரத்தில்  கசிந்திருந்தது.இவர்களினது உறுதி மொழியில் மகிந்த ராஜ பக்ஸ உட்பட அவரது குடும்ப அங்கத்தவர்கள் பாதுகாப்பே மிக முக்கியமானதாக அமைந்திருந்ததாகவும் தகவல் கசிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இதன் பிற்பாடு மகிந்த ராஜ பக்ஸ அரசியலில் இருந்து ஒதுங்கிக் காணப்பட்டாலும் சில சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து சு.க இன் தலைமைத்துவத்தினை தன் கையிலேயே வைத்திருந்தார்.மைத்திரி அணியினருக்கென்று ஒரு கட்சி இல்லாத காரணத்தினாலும்,முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எவ்வாறேனும் சு.க இன் ஆட்சியினை தன் பக்கம் கொண்டு வர வேண்டும் என விரும்பியதாலும் மீண்டும் மகிந்த ராஜ பக்ஸவினது பிள்ளைகள் மீது குற்றம் சிலதினை சுமத்தி அவர்கள் கைது செய்யப்படுவார்கள் போன்ற ஒரு தோற்றப் பாட்டினை உருவாக்கி இருந்தார்.இதற்கு முகம் கொடுக்க முடியாது போன முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ தலமைத்துவத்துவத்தினை மைத்திரியிடம் ஒப்படைத்த்தார் என்றே கூற வேண்டும்.

இதன் பிற்பாடு மகிந்த அரசியலில் இருந்து விலகுவது போன்ற நிலைப்பாட்டில் இருந்த போதும் மகிந்த ராஜ பக்சவின் ஆதரவாளர்கள் அவரினை மீண்டும் அரசியலினுள் நுழைக்க பல தடவைகள் முயன்றனர்.இதற்கு இவர்கள் நடாத்திய ஆதரவுக் கூட்டம் மகிந்த ராஜ பக்ஸவிற்கு நாளுக்கு நாள் புது நம்பிக்கையினை கொடுத்து மீண்டும் அரசியலினுள் நுளைவிக்கத் தேவையான மன வலிமையினை வழங்கியது.இதன் பிற்பாடு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ பிரதமர்ப் பதவியினைக் குறி வைத்தார்.நாள் செல்லச் செல்ல மக்கள் ஆதரவு மகிந்தவிற்கு அதிகரித்தது.இவ் ஆதரவு மைத்திரி இற்கு மிகப் பெரிய தலை இடியாய் உருவெடுத்தது.தற்போதைய மைத்திரியின் நிலையினை சுருக்கமாக குறிப்பிடுவதென்றால் “ஆப்பிழுத்த குரங்காட்டம்” இருந்தார் என்று கூறலாம்.இப் பிரச்சினையை மைத்திரி எதிர் கொள்ள மகிந்த ராஜ பக்ஸவினை  அடக்கி ஒடுக்கும் முறையினைக் கையாள்கிறாரா..?? என்றே சிந்திக்கத் தோன்றுகிறது.

இருப்பினும் இக் குற்றச் சாட்டுகள் “இல்லை” என நிரூபணமானால் எதிர் வரும் தேர்தலில் அது மகிந்த ராஜ பக்ஸவின் வெற்றிக்கான மிகப் பெரிய  சாதகமான  காரணியாக அமையும்.இதை மைத்திரி அணியினர் அறியாமலும் இருக்க மாட்டார்கள்.எனவே,இக் குற்றச் சாட்டுகளில் இருந்து மைத்திரி அணியினரின் உதவியோடு மகிந்த ராஜ பக்ஸ வெளியேறுவாராக இருந்தால் அது அது மகிந்த ராஜ பக்சவினை அரசியலில் இருந்து வெளியேற்றுவதாக அமையும் அதே நேரம் மகிந்த ராஜ பக்ஸ தனது முயற்சியினால் வெற்றி பெற்றால் அது எதிர்வரும் தேர்தலில் மைத்திரி இற்கு பாரிய எதிர் விளைவினை தோறுவிக்கலாம்.எனினும்,இக் குற்றச் சாட்டுகளினை எதிர் கொள்ள மகிந்த ராஜ பக்ஸ சரியான ஏற்பாடுகளுடன் இருப்பின் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள்,போராட்டங்களினை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.சிரித்த முகத்துடன் மோதலுக்குத் தயாராகலாம்.இவ்வாறான போராட்டங்கள் அவரினால் சட்ட ரீதியாக இவ் விடயத்தினை எதிர் கொள்ள முடியாது என்பதனை தெளிவாக்குகின்ற அதே வேளை அரசியல் அழுத்தத்தின் தேவையினை அவர் உணர்ந்திருப்பதையுமே சுட்டிக் காட்டுகிறது.

எனவே,முன்னாள் அதிபர் மகிந்த ராஜ பக்ஸ இதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்..?? எதிர்காலம் எவ்வாறு அமையப் போகிறது..?? என்பது எல்லாம் நடக்கும் போதே தெரிந்து கொள்ளலாம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.

Post a Comment

0 Comments