யாழ்ப்பாணத்தில் மக்கள் வாழ்வதற்கு வீடில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு 100 கோடி ரூபா செலவில் அரச மாளிகை நிர்மாணித்தார். நாம் இதனை தடை செய்து விட்டோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
விருப்பு வாக்கு முறையை முற்றாக ஒழித்து தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறை கலந்த தேர்தல் மாற்றம் அவசரமாகக் கொண்டு வரப்படுமென்றும் பிரதமர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக தெளிவுப்படுத்தி உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரம இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றவுடன் நூறு நாள் அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஜனநாயகம் தலைகீழாக்கப்பட்ட சூழ்நிலையிலேயே எமது ஆட்சியின் வேலைகளை ஆரம்பிக்கும் நிலையேற்பட்டது.
அனைத்தும் அரசியல் மயமாக்கப்பட்ட நிலையில் ஊழல் மோசடிகள் நிறைந்த அரச உத்தியோகத்தர்கள் குழுவுடனும் அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்துடனேயே நாம் ஆட்சி பொறுப்பேற்றோம். இச் சவாலை ஏற்றுக்கொண்டோம். அதற்கு முகம் கொடுத்தோம்.
தற்போது மைத்திரியின் ஆட்சியின் கீழ் 88 நாட்களில் நாம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக திருப்தியடைகிறோம்.100 நாள் வேலைத்திட்டத்தில் மக்களிக்கு பல்வேறுபட்ட சலுகைகளை வழங்கியுள்ளோம். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், எரிபொருட்களின் விலைகள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டன. அரச ஊழியர்கள், ஓய்வூதியக்காரர்களுக்கும் சம்பள உயர்நிலை வழங்கப்பட்டன. கர்ப்பிணி தாய்மாருக்கு ரூபா 20, 000 பெறுமதியான போஷாக்கு உணவுப்பொதி வழங்கப்பட்டது.
நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்கப்பட்டதோடு பாலுக்கும் உத்தரவாத விலை வழங்கப்பட்டது. தரம் குறைந்த உரக்கொள்வனவு நிறுத்தப்பட்டது. கைத்தொலைப்பேசிகளுக்கான மீள் நிரப்பு கட்டணத்துக்கான வரி குறைக்கப்பட்டது.
இரண்டு இலட்சத்திற்கு உள்ளான அரச வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளுக்கான வரி நீக்கப்பட்டது. அது மே மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும். மஹாபொல வரித் தொகை அதிகரிக்கப்பட்டது.
ஊழியர்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைவருக்கும் சலுகைகள் வழங்கப்பட்டது மட்டுமின்றி தனியார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என பரிந்துரையை மட்டுமே முன்வைக்காது அதனை சம்பள நிர்ணய சபைக்கு மட்டும் வரையறுக்காது தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வு அதிகரிப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான அனைத்து சலுகைகளும் மக்கள் மீது வரிச்சலுகைகளை சுமத்தாமலே வழங்கினோம்.
ஆட்சிப் பொறுப்பை தாம் கையேற்கும்போது சமூகம் சீரழிந்து காணப்பட்டது. எனவே பொருளாதார சமூக, அரசியல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டிய நிலையேற்பட்டது.
19ஆவது திருத்தம் இவையனைத்திலும் முதன்மையானதாகும். இது தொடர்பாக தகவல்கள் சபையில் முன் வைக்கப்பட்டுள்ளது. எனவே அதிக தகவல்கள் அவசியமில்லை.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். விருப்பு வாக்கு முறையை முற்றாக ஒழித்து விகிதாசாரம் மற்றும் தொகுதிவாரி சார்ந்த தேர்தல் முறையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் நிறைவேற்றுச் சபையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. அதற்கமைய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு அதற்கான நகல் தயாரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அத்தோடு தகவல் அறியும் சட்ட மூலத்தையும் பாராளுமன்றத்தில் முன்வைப்போம்.
போதை பொருட்களை தடை செய்வதற்கான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. கடந்த ஆட்சியில் இவ் வியாபாரத்தில் ஈடுபட்ட நெத்தலிகள் மட்டுமே பிடிபட்டுள்ளன. முதலைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன ஊழல் மோசடிகளை ஆராய்வதற்கும் பலப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்கான தனியான பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு அவர்களின் ஊழல் மோசடிகளை கண்டுபிடிப்பதற்காக எமது அதிகாரிகளுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, உலக வங்கி மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது.
ராஜபக் ஷ ஆட்சி காலத்தில் காட்டுதார்பார் நாட்டுக்குள் காணப்பட்டது. இன்று எமது நீதித்துறை மற்றும் படைகளின் ஒழுக்கம் தொடர்பாக சர்வதேசம் நம்பிக்கை வைக்க ஆரம்பித்துள்ளது. சர்வதேச ரீதியில் எமக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
*ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி.வரிச்சலுகைகள் மற்றும் எமது மீன்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சர்வதேச ரீதியில் எமது தாய் நாடு இழந்துள்ள சலுகைகள் அனைத்தும் மீளப்பெற்றுக்கொள்ளப்படும். யுத்தத்தால் பாரிய அளவில் பாதிக்கப்பட்ட எமது வடக்கு மக்கள் தொடர்பாக எமது விசேட கவனத்தை செலுத்தியுள்ளோம். அம் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல யாழ்பாணத்தில் மக்கள் வாழ வீடு இல்லாமல் கஷ்டப்படுகையில் நூறு கோடி ரூபா செலவில் முன்னாள் ஜனாதிபதி அங்கு அரச மாளிகை நிர்மாணித்துள்ளார். அதனை நிறுத்தியுள்ளோம். ஹோட்டலாக மாற்றியுள்ளோம்.
நான் 3 நாட்கள் வடக்கில் விஜயத்தைமேற்கொண்டேன். மத்திய அரசுக்கு சொந்தமான விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுத்துள்ளோம். நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதில்லை ஊடக சுகந்திரம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த ஆட்சியால் செய்ய முடியாதவற்றை 100 நாட்களுக்குள் நாங்கள் செய்து முடித்துள்ளோம். உறுதி வழங்கியுள்ள எஞ்சிய விடயங்களையும் செய்து முடிப்போம். ராஜபக்ஷ ஆட்சியில் 10 வருடங்களில் செய்ய முடியாததை 88 நாட்களில் செய்து காட்டியுள்ளோம். இலங்கை அரசியல் வரலாற்றில் இது முக்கியமானதாகும்.
எமது நாட்டை மீண்டும் ஒழுக்கம், பண்பு நிறைந்த நாடாக மாற்றுவதற்கான அடித்தளத்தை நாம் போட்டுள்ளோம். இதன் மூலம் நாட்டை மீளக் கட்டியெழுப்புவோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
0 Comments