இலங்கை அரசியல் வரலாற்றில் பலவிதமான அதிரடியான
மாற்றங்கள் நிகழக்கூடிய வாரமாக இவ்வாரம் அமையவுள்ளதாக அரசியல் அவதானிகள்
எதிர்வு கூறியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள்
அடங்கிய நூறு நாள் வேலைத்திட்டத்தின் முடிவு நாளும் இவ் வாரத்திற்குள்
வருகிறது.
அத்துடன் பாராளுமன்றத்தில் 19வது மற்றும் 20வது திருத்தச் சட்டமூலங்கள்
சமர்ப்பிக்கப்படுமா? அல்லது பிற்போடப்படுமா? அல்லது சமர்ப்பிக்கப்பட்டு
அதனை அங்கீகரிப்பதில் இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்படுமா? எனும்
கேள்விகளுக்கும் இவ்வாரம் தீர்வு கிடைக்கவுள்ள அதேவேளை பாராளுமன்றம்
இவ்வாரம் அதாவது 23ம் திகதி நள்ளிரவு கலைக்கப்படலாம் எனும் தகவல்களும்
அரசியல் உயர் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்த சகலவிதமான இழுபறிகளுக்கும் இவ்வாரம் தீர்வு கிடைக்கும். அதிலும்
பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் அனைவரதும் சுயரூபங்கள் வெளிச்சத்திற்கு
வரும். அதன் பின்னர் பொதுத் தேர்தலில் மக்கள் தாம் விரும்பும் தமது
தலைமையைத் தேர்ந்தெடுப்பர் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
உண்மையில் 19வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி
மைத்திரியும் பிரதமர் ரணிலும் மிகவும் உறுதியாகவுள்ளனர். எனினும் அதனை
நிறைவேற்றுவதில் குழப்பங்களை உண்டு பண்ணுவதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்சவின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பது மஹிந்த தரப்பின்
நிலைப்பாடாக உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆளும் கட்சியினர் 20ம் மற்றும்
21ம் திகதிகளில் 19 மற்றும் 20ம் திருத்தச் சட்டத்தை சமர்ப்பிக்க
தீர்மானித்திருந்தனர். எனினும், 19வது திருத்தச் சட்டத்தை சமர்ப்பிக்க
எதிர்க்கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை எனவும், 19வது திருத்தச் சட்டம்
சமர்ப்பிக்கப்படுவதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருவதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
19ம், 20ம் திருத்தங்கள் சமகாலத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிடிவாதமாக உள்ளனர். மஹிந்தவின் மீள்
எழுச்சி பற்றிய சிக்கல்களால் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை அதிருப்தியடைய
வைக்க விரும்பாத ஜனாதிபதி மைத்திரியும், இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது. இதனால் 19வது திருத்தத்தை நிறைவேற்ற ஐ.தே.கவிற்கு
சிரமம் ஏற்பட்டுள்ளது.
திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் 19வது திருத்தம் குறித்த
விவாதத்திற்கு சபை நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டு, நேரம்
ஒதுக்கப்பட்டுள்ளது. இரு நாட்களும் விவாதத்தை நடத்தி முடித்துவிட்டு
வாக்கெடுப்பிற்கு விடப்படாமல் பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கவும்,
அதற்கிடையில் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20வது திருத்தம்
சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டதன் பின்னர் இரண்டையும் ஒரே நாளில்
நிறைவேற்ற பிரதான கட்சிகள் இரண்டும் கலந்துரையாடி இணக்கம் கண்டிருப்பதாக
அறியவருகிறது.
பெரும்பாலும் ஏப்ரல் 28ம் திகதிக்கு முன்னர் இரண்டையும்
நிறைவேற்றிக்கொண்டதன் பின்னர் மே மாதம் முதல் வாரமளவில் நாடாளுமன்றம்
கலைக்கப்படக்கூடிய சாத்தியம் தென்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய கூட்டமொன்று நாளை 20ம் திகதி
நடைபெறவுள்ளது. பிரதமரும் கட்சியின் தேசிய தலைவருமான ரணில் விக்கிரமசிங்க
தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப் பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப் பட்டுள்ளனர். அலரிமாளிகையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப் பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப் பட்டுள்ளனர். அலரிமாளிகையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
எனினும் 19வது திருத்தச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர்
பாராளுமன்றத் தேர்தல் நடக்குமாயின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய
தேசியக் கட்சி என்பவை பழையபடி கடும் போட்டியை எதிர்கொள்ளும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரை ஜனாதிபதி மைத்திரி ஒரு
சுமுகமான அரசாட்சியை செய்துவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாகவுள்ளார்.
இதனை அவர் வெளிப்படையாகக் கூறத் தவறினாலும் உள்ளூர தனது ஆதரவாளர்களூடாக
தனது நோக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் பத்தொன்பதாவது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவது என்பது ஜனாதிபதி மைத்திரிக்கு இருக்கக்கூடிய பெரும் சவாலாகும்.


0 Comments